பெண்கள் முகாமிட்டுள்ளனர்


குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் இஸ்லாமிய இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்களும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
டெல்லியில் நடந்துவரும் ஷாகின் பாக் போராட்டத்துடன் இந்தப் போராட்டம் ஒப்பிடப்படுகிறது. அது சரியா?

கோப்புப்படம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்தும், அதனை நிறைவேற்ற மாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர வேண்டுமென்றும் கோரி, வெள்ளிக்கிழமையன்று சென்னை வண்ணாரப்பேட்டையில் துவங்கிய போராட்டம், நான்காவது நாளாக திங்கட்கிழமையன்றும் நடந்தது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து போராடுவதற்காக நீண்ட காலமாகவே வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள ஜமாத்துகளின் சார்பில் தொடர்ந்து அனுமதி கோரப்பட்டுவந்ததாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், காவல்துறை போராட்டத்திற்கென எந்த இடத்தையும் ஒதுக்கிக்கொடுக்கப்படாத நிலையில், பிப்ரவரி 14ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று பிற்பகல் 2 மணிக்குப் பிறகு வண்ணாரப்பேட்டை பாலத்திற்கு அருகில் போராட்டம் துவங்கியது.

(கோப்புப்படம்)

இந்தப் போராட்டத்தில் பெருமளவில் பெண்கள் பங்கேற்றனர். இதற்குப் பிறகு, மாலை ஐந்து மணியளவில் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை முடித்துக்கொண்டு கலைந்து செல்லும்படி கோரினர். இதையடுத்து ஏற்பட்ட பிரச்சனை பெரிதாகி, அது தடியடியில் முடிவடைந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காவல்துறையினரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். தங்களில் சிலரும் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்தது.
தடியடி நடந்த தருணத்தில் ஊடகங்கள் ஏதும் அங்கு இல்லாத நிலையில், வெள்ளிக்கிழமையன்று இரவுக்கு மேல்தான் தடியடி நடத்தப்பட்ட தகவல் மெல்ல மெல்ல சமூகவலைதளங்களின் மூலம் வெளியானது. இதற்குப் பிறகு, சென்னையின் பல பகுதிகளிலும் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு சாலை மறியலில் இறங்கினர்.
இதற்குப் பிறகு போராட்டங்களைத் தவிர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் சென்னை நகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் ஈடுபட்டார். முடிவில், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர்களை விடுவிப்பதென காவல்துறை உறுதியளித்ததையடுத்து, போராட்டங்கள் ஆங்காங்கே விலக்கிக்கொள்ளப்பட்டன.
இருந்தபோதும் வண்ணாரப்பேட்டை பகுதியில் போராட்டக்காரர்கள் தொடர்ந்து அமர்ந்திருந்தனர். இதற்குப் பிறகு, சனிக்கிழமையிலும் போராட்டக்காரர்கள் அதே இடத்தில் அமர்ந்திருக்க, காவல் நிலைய முற்றுகைப் போராட்டமும் அறிவிக்கப்பட்டது.
இந்தப் போராட்டங்களுக்குப் பிறகு, சனிக்கிழமையிலிருந்து தற்போதுவரை போராட்டக்காரர்கள் தொடர்ந்து அதே இடத்தில் அமர்ந்து போராடிவருகின்றனர்.

போராட்டங்களில் என்ன தொடர்பு?

"குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து, வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை போராட்டம் நடத்துவது என்பதுதான் திட்டமாக இருந்தது. ஆனால், வெள்ளிக்கிழமை மாலையில் நடந்த தடியடி எங்கள் மிகவும் புண்படுத்தியிருக்கிறது. தற்போது அரசு ஏதாவது வாக்குறுதி அளிக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள்" என்கிறார் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பெண் ஒருவர்.
அங்கிருக்கும் பெரும்பாலானவர்களைப் பொறுத்தவரை, குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்தும், அந்தச் சட்டத்தைச் செயல்படுத்த மாட்டோம் என்றும் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்பதையே தற்போதைய கோரிக்கையாகச் சொல்கிறார்கள்.
இது தொடர்பாக, அமைச்சர்கள், முதலமைச்சருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட மாட்டாது என சபாநாயகர் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் போராட்டம் தொடர்ந்து நடந்துவருகிறது.
தில்லியின் ஷாஹின்பாக் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து போராட்டம் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், வண்ணாரப்பேட்டை போராட்டத்தை பலரும் அதனுடன் ஒப்பிட்டுவருகிறார்கள். வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடக்கும் பகுதியிலும் அதுபோல ஒரு பேனரும் கட்டப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தப் போராட்டத்தை ஷாஹின்பாகுடன் ஒப்பிட முடியுமா?
"இந்தப் போராட்டம் இன்னமும் இஸ்லாமியர்களின் போராட்டமாகத்தான் இருக்கிறது. வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் பெரிய அளவில் கலந்துகொள்வதாகத் தெரியவில்லை. மேடையில் அவ்வப்போது வேறு இயக்கங்களைச் சேர்ந்த சிலர் பங்கேற்கிறார்கள். ஷாஹின் பாக்கைப் பொறுத்தவரை அது மிகப் பெரிய அளவில் நடக்கிறது. இங்கே அப்படி இல்லை. மேலும், தமிழகத்தின் பிற பகுதிகளில் நடக்கும் போராட்டங்களிலம் எல்லாத் தரப்பினரும் கலந்துகொள்வதில்லை" என்கிறார் தன்னாட்சி தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளரான ஆழி செந்தில்நாதன்.
இதன் காரணமாக, இந்த விவகாரத்தை இஸ்லாமியருக்கு மட்டுமான பிரச்சனையாக காட்டுவதற்கு அரசுக்கு எளிதாக இருக்கிறது என்கிறார் அவர்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் போராட்டம் துவங்கிய நிலையிலும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அங்கு சென்று போராட்டக்காரர்களைச் சந்தித்து ஆதரவு தெரிவிக்கின்றனரே தவிர, வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் யாரும் பெரிய அளவில் போராட்டத்தில் பங்கேற்கவில்லை.
"சமீப காலத்தில் தேசிய அளவிலான இயக்கம் என்று பார்த்தால், அது ஜேபியின் இயக்கம்தான். அதைக்கூட வட மாநிலங்களில் நடத்த இயக்கமாக சிலர் பார்க்கிறார்கள். ஆனால், அதற்குப் பிறகு சிஏஏவுக்கு எதிரான போரட்டங்கள்தான் நாடு முழுவதும் பரந்துபட்ட அளவில் நடக்கிறது. அது தமிழகத்திலும் எதிரொலிக்கிறது. இந்தியா முழுமைக்குமே ஷாஹின்பாக் ஒரு முன்னுதாரண போராட்ட வடிவமாகியிருக்கிறது" என்கிறார் ஃப்ரண்ட்லன் இதழின் ஆசிரியரான விஜயசங்கர்.

போராட்டங்களில் என்ன தொடர்பு?

இஸ்லாமியர்கள் பெண்களை வெளியிலேயே விடமாட்டார்கள் என்ற 'ஸ்டீரியோடைப்'பையெல்லாம் மீறி பெண்கள் இப்போது வெளியில் வந்து போராடுகிறார்கள்; இதனை ஒடுக்க முயன்றால் நிலைமை சிக்கலாகும் என்கிறார் அவர்.
இந்திய அரசியல் சாஸனம் எழுதப்படும்போது அதன் முகவுரையில் 'மதச்சார்பற்ற' என்ற வார்த்தை இல்லை. காரணம், இந்திய மக்களிடம் அந்த எண்ணம் ஊறிப்போயிருப்பதாக அரசியல்சாஸனத்தை எழுதியவர்கள் நினைத்தார்கள். மதத்தை அடிப்படையாக வைத்து பிளவுபடுத்தும் முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்றாலும், இந்த மதச்சார்பற்ற தன்மை மக்களிடம் இப்போது வெளிப்பட ஆரம்பித்திருப்பதைத்தான் இந்தப் போரட்டங்கள் காட்டுகின்றன என்கிறார் விஜயஷங்கர்.
ஆனால், ஷாஹின்பாக் - வண்ணாரப்பேட்டை ஆகிய இரு போராட்டங்களையும் கவனித்தவர்கள் சில வேறுபாடுகளைச் சொல்கிறார்கள். அதாவது, ஷாஹின் பாகில் இஸ்லாமியர்கள் போக கிறிஸ்தவர்கள், இந்துக்கள், சீக்கியர்கள் என பல மதத்தினரும் வந்து பங்கேற்கின்றனர். இங்கே அப்படி நடக்கவில்லை.
ஷாஹின்பாகில் பெண்களே எல்லாவற்றையும் முன்னெடுத்துச் செல்கிறார்கள். இங்கே சில இஸ்லாமியக் கட்சிகள் முன்னணியில் நிற்கின்றன.
வெளியிலிருந்து வருபவர்கள் யாரும் போராட்டக்களத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை. ஊடகத்தினர்கூட கடுமையான விசாரணைகளுக்குப் பிறகே போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களுடன் பேசுவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
"இது குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம். ஆகவே இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்பதாக இருக்கவேண்டும்" என சிலர் சொல்கிறார்கள். ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் இதனை சிலர் வெளிப்படையாகவே எழுதிவருகின்றனர்.