அமெரிக்காவில் 1000-ஐ கடந்த உயிரிழப்பு


அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் பத்தாயிரம் அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் பதிவாகும் அதிகபட்ச எண்ணிக்கை இதுதான். இதன் மூலம், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66,132 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1031 ஆகவும் அதிகரித்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவு தெரிவிக்கிறது.
கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட அமெரிக்க மாகாணமான நியூயார்க்கில் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இது ஒட்டுமொத்த அமெரிக்காவில் இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட பாதிக்கும் அதிகமாகும்.
இந்நிலையில், அமெரிக்காவில் மிகவும் பிரபலமாக இருந்துவந்த இந்திய சமையல்கலை நிபுணரான ஃபிலாய்ட் கார்டோஸ் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த நேற்று (புதன்கிழமை) உயிரிழந்தார்.
நியூ ஜெர்ஸி மருத்துவமனையில் இறந்த அவருக்கு, சிறந்த உணவை அளித்தவர் என்ற வாசகங்களுடன் எண்ணற்ற உணவுப்பிரியர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக அமெரிக்க வாழ் இந்தியர்கள் பலரும் ஃபிலாய்ட் கார்டோஸ் குறித்து சமூகவலைதளங்களில் அதிக அளவில் நினைவு கூர்ந்து வருகின்றனர்.
இதே சூழ்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21,287 என்னும் புதிய உச்சத்தை தொட்டிருப்பதை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவு காட்டுகிறது.
இன்று (மார்ச் 26) காலை இந்திய நேரம் 10 மணி நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் 4,71,407 பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 1,14,051 பேர் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளதாக அந்த தரவு கூறுகிறது.