மலையகத்தில் முண்டியடிப்பு


(க.கிஷாந்தன்)

பொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று (26.03.2020) காலை 6 மணிக்கு தற்காலிகமாக நீக்கப்பட்டதையடுத்து மலையகத்தில்  பிரதான நகரங்களுக்கு பெருமளவில் மக்கள் படையெடுத்து வந்து, அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்தனர்.

ச.தொ.ச விற்பனை நிலையங்கள், சுப்பர் மார்க்கெட்டுகள், சில்லறை மற்றும் மொத்த வியாபார நிலையங்களுக்கு முன்னால் நீண்ட வரிசையில் காத்திருந்து, பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் மக்கள் பொருட்களை வாங்குவதை காணக்கூடியதாக இருந்தது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இலங்கையில் இருந்து இன்னும் முழுமையாக நீங்காததால், அது வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் முழு இலங்கையையும் முடக்கும் வகையில் அரசாங்கம் பொலிஸ் ஊடரங்குச்சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.

எனினும், அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக பொலிஸ் ஊடரங்குச்சட்டம் தளர்த்தப்படும் வேளையில் நகரங்களுக்கு வருபவர்கள் தற்பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டு, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வரிசைகளில் நிற்கும் போது குறைந்தபட்சம் ஒரு அடி  இடைவெளியே பின்பற்றுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், அட்டன், தலவாக்கலை ஆகிய நகரங்களுக்கு இன்று வருகை தந்து, பொருட் கொள்வனவுக்காக வரிசையில் காத்திருந்தவர்களில் பலர் சுகாதார நடைமுறைகளை பின்பற்றவில்லை.

சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் ஆகிய நடைமுறைகளைப் பின்பற்றவில்லை. சன நெருக்கடியால் மேலும் சிலர் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டதையும் குறித்த நகரங்களில் காணமுடிந்தது. எனினும், பொலிஸார் தலையிட்டு குழப்பங்களை தடுத்தனர். பாதுகாப்பு நடைமுறையைப் பின்பற்றுமாறும் ஆலோசனை வழங்கினர்.

அட்டன், தலவாக்கலை ஆகிய நகரங்களில் வங்கிகளிலும் சனக்கூட்டம் காணப்பட்டது. எரிபொருள் நிலையங்களிலும் வாகனங்கள் நீண்டவரிசையில் நிண்டன. இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், ரோந்து நடவடிக்கையிலும் பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.