கால வரையறையின்றி முடக்கப்பட்ட இலங்கை மாவட்டங்கள்


இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் மிகுந்த பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை முடக்கப்பட்டுள்ளன.
ஏனைய மாவட்டங்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் அவ்வப்போது தளர்த்தப்பட்டு, மீண்டும் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், குறித்த மாவட்டங்களுக்கு மாத்திரம் மறு அறிவித்தல் வரை அந்த ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்கள் ஏற்கனவே மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்ட பின்னணியில், யாழ்ப்பாணத்தை மறு அறிவித்தல் வரை முடக்க அரசாங்கம் இன்று தீர்மானித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், வவுனியா, யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை தவிர்த்த ஏனைய மாவட்டங்களுக்கான ஊரடங்கு சட்டம் இன்று தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று மாலை முதல் மீண்டும் குறித்த மாவட்டங்களுக்கான ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இன்றைய தினம் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்படும் மாவட்டங்களுக்கு மீண்டும் 30ஆம் தேதி அதிகாலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தளர்த்தப்படவுள்ளது.
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த, ஏனைய மாவட்டங்களான வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கான ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 6 மணி முதல் 2 மணி வரை (மார்ச் 27) தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது.