அமைதியான முறையில் புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்!


 
இம்முறை புனித நோன்புப் பெருநாளை புதியதொரு சூழலில் கொண்டாடும் எமது  இலங்கை வாழ் இஸ்லாமிய மக்களுக்குப் புனித நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் நான் பெருமிதம் அடைகின்றேன்.

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக எமது சகோதர சிங்கள, தமிழ் மக்கள் தங்களுடைய பண்டிகைகளை தமது வீடுகளிலிருந்து அமைதியான முறையில் கொண்டாடியதைப் போன்று, இலங்கை வாழ் முஸ்லிம் மக்களும் சுகாதார துறையினரின் ஆலோசனைகளைப் பேணி, சமூக இடைவெளிகளைப் கடைப்பிடித்து, முகக்கவசங்கள் அணிந்து அமைதியான முறையில் புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடுமாறு நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

அதே போன்று ரமழான் மாதத்தில் கடைப்பிடித்து வந்த நற்பண்புகளையும், இறையச்சத்தையும் எமது வாழ்நாள் முழுவதும் எடுத்து நடக்க உறுதி பூண வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று முழு உலகையும் தலை கீழாகப் புரட்டிப்போட்டுள்ளது. இன்று பள்ளிவாசல்கள் பூட்டப்பட்டு, வீடுகள் பள்ளிவாசல்களாக மாற்றப்பட்டுள்ளது. ஐங்காலத் தொழுகைகள்,  குர்ஆன் ஓதுதல், தராவிஹ் தொழுகை போன்ற நற்காரியங்களை குடும்பமாக நிறைவேற்ற எமக்குச் சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றது. இந்த நற்காரியங்களை தொடர்ந்து மேற்கொள்வதன் ஊடாக இம்மையிலும் மறுமையிலும் ஈடேற்றம் பெற்றவர்களாக எம்மால் மாறமுடியும்.

அதேபோன்று வைரஸ் தொற்றுக்கு எதிராக இன மத வேறுபாடுகளின்றி  போராடும் ஜனாதிபதி, பிரதமர் சுகாதாரத் துறையினர், இராணுவத்தினர் உள்ளிட்ட அனைத்து துறைசார் ஊழியர்களுக்கும் இந்த புனிதப் பெருநாள் தினத்தில் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும்,  இதுபோன்ற கொடிய நோய்களிலிருந்து மக்களைப் பாதுகாத்து, ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடித்தவர்களாக வாழக்கூடிய ஓர் மனித சமூகமாக எம்மை ஆக்கியருள்வாயாக என்றும் அல்லாஹ்விடத்தில் இருகரம் ஏந்தி பிரார்த்திக்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் இனிய நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்  "ஈத் முபாரக்".


ஏ.ஜே.எம். முஸம்மில்.
வடமேல் மாகாண ஆளுநர்Advertisement