குழந்தைகளுக்கு லொலிபாப் வாங்க திட்டமிட்ட அமைச்சர் பதவிநீக்கம்


பள்ளி குழந்தைகளுக்கு லாலிபாப் வாங்குவதற்காக இரண்டு மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான பணத்தை செலவிட திட்டமிட்ட மடகாஸ்கரின் கல்வித்துறை அமைச்சர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸுக்கு தீர்வாக கருதப்படும் சோதிக்கப்படாத மூலிகை சாறை மாணவர்கள் பருகிய பின்னர் அதன் கசப்புணர்வை மறக்கடிக்க செய்வதற்காக மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா மூன்று லாலிபாப்புகள் வழங்கப்படும் என்று ரிஜசோவா அன்ரியாமனனா தெரிவித்திருந்தார்.

மடகாஸ்கரின் அதிபரிடமிருந்து எதிர்ப்பு எழவே இந்த திட்டம் கைவிடப்பட்டது.மடகாஸ்கர் அதிபர் ஆண்ட்ரி ராஜோலினா கோவிட்-ஆர்கானிக்ஸ் என்னும் ஒருவகை மூலிகை சாறை கொரோனா வைரஸ் சிகிச்சையாக ஊக்குவித்து வருகிறார்.

இந்த மூலிகை சாறு கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கையில் பல்வேறு ஆஃப்ரிக்க நாடுகளும் இதை இறக்குமதி செய்ய ஆரம்பித்துள்ளன.எனினும், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு இதுவரை எவ்வித தடுப்பு மருந்தும் கண்டறியப்படவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மடகாஸ்கரின் தேசிய மருத்துவ அமைப்பும் ஆர்ட்டெமிசியா என்னும் தாவரத்தை கொண்டு தயாரிக்கப்படும் இந்த பானத்தின் செயல்திறன் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளது. இது மக்களின் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கக் கூடும் என்று அது எச்சரிக்கை விடுத்துள்ளது.