சென்னை - மும்பை மோதலா?

 


2020ஆம் ஆண்டு விளையாட்டு போட்டிகளுக்கு பேர் போன ஆண்டாக விளங்கவில்லை. கொரோனா வைரஸ் பொது முடக்கம் காரணமாக பல விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, 2020ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெறவிருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தற்போது அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பல கிரிக்கெட் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன, சில கிரிக்கெட் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் மிகவும் பிரபலமான இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளும் (ஐ.பி.எல்) அடக்கம். இந்த ஆண்டு மார்ச் 29ஆம் முதல் தொடங்கி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த ஐ.பி.எல் போட்டிகள், கொரோனா வைரஸ் பொது முடக்கம் காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆகஸ்ட் 2ஆம் தேதி கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக, 13வது ஐ.பி.எஸ் போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி, இந்த ஆண்டு அனைத்து ஐ.பி.எல் போட்டிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும். இந்திய அரசாங்கத்திடம் தேவையான அனுமதிகளை பெற்று துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபி உள்ளிட்ட இடங்களில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்த வாரத்திற்குள் ஐ.பி.எல் போட்டிகள் தொடர்பான அனைத்து விவரங்களுடன் கூடிய பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

சரி, செப்டம்பர் 19ஆம் தேதி நடக்கும் முதல் போட்டியில் எந்த இரண்டு அணிகள் மோதப் போகிறது என தெரியுமா? இது தொடர்பாக அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா தனது சமூக ஊடக பக்கத்தில் இதுகுறித்த தகவலை மறைமுகமாக வெளியிட்டுள்ளார்.

''இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் ஆதிக்கம் செலுத்திய விளையாட்டு வீரர். கிரிக்கெட் வரலாற்றில் இவர் முக்கியமான இடத்தை பிடித்துள்ளார். லட்சியத்துடன் விளையாடுபவர், அணியை கட்டமைப்பதில் வல்லவர். தோனியை இனி நீல நிற சட்டையில் காண முடியாது என்றாலும் மஞ்சள் நிற சட்டையில் காணமுடியும். 19ஆம் தேதி டாஸ் போடும் இடத்தில் சந்திப்போம், எம்.எஸ்.தோனி'' என தோனி சர்வதேச விளையாட்டு போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றபோது ரோஹித் சர்மா பதிவிட்டிருந்தார்.

போட்டிகளை நேரில் பார்க்க முடியுமா?

ஐ.பி.எல் போட்டிகளை நேரில் காண்பதற்கு பார்வையாளர்களுக்கு அனுமதி உள்ளதா, இல்லையா என்ற கேள்விக்கு பிசிசிஐ அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் தான் பதில் அளிக்கவேண்டும்.

ஆரம்பத்தில் பார்வையாளர்கள் குறித்து வெளியான அறிவிப்புகளில், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் 20 முதல் 25 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டது.

ஆனால் தற்போது வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

ஒரு வேளை ஐ.பி.எல் போட்டிகளில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டால், கொரோனா பொது முடக்கத்திற்கு பிறகு பார்வையாளர்களுடன் நடைபெறும் மிகப் பெரிய விளையாட்டு போட்டியாக அது அமையும்.

IPL 2020

போட்டிகள் நடைபெறும் நேரம் மற்றும் இடம் எவ்வளோ முக்கியமோ அதே அளவுக்கு வழிகாட்டுதல்களும் விதிமுறைகளும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன.

ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வைரஸ் பரவாமல் இருக்க, "பயோ செக்யூர் பபிள்" (Bio Secure bubble) என்னும் நோய்த்தொற்று பரவல் தடுப்பு வழிமுறையை ஐ.பி.எல் தொடரில் நடைமுறைப்படுத்த பிசிசிஐ முயல்கிறது.

பயோ செக்யூர் பபிள் முறை என்பது என்ன?

ஐ.பி.எல் போட்டிகளை பாதுகாப்பாகவும் வெற்றிகரமாகவும் நடத்த இந்த வழிமுறைகளை போட்டிகளில் பங்கு வகிக்கும் வீரர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பின்பற்ற வேண்டி இருக்கும் என்று பிசிசிஐயின் செயலாளர் ஜெ ஷா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பான முழுமையான விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.

அதாவது, பயோ செக்யூர் பபிள் முறையின்படி, அனைத்து கிரிக்கெட் வீரர்களும் வெளி உலகத்திடம் இருந்து தங்களை முழுமையாக தனிமைப்படுத்திகொள்ள வேண்டும். அதாவது போட்டி நடைபெறுவதற்கு ஒரு மாதம் முன்பு முதல் விளையாட்டு வீரர்கள் தங்கள் உறவினர்கள், நண்பர்கள் என யாரையும் சந்திக்க தங்கள் இடத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது. இதனால் விளையாட்டு வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

கொல்கத்தா

சமீபத்தில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக இந்த 'பயோ செக்கியூர் பப்பில்' வழிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டது.

அந்த போட்டியின் போது இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஃப்ரா ஆர்செர், விதியை மீறி தன் நண்பர் ஒருவரை சந்தித்ததால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

எனினும், இந்த கட்டுப்பாடுகளை நீண்ட நாட்களுக்கு கடைப்பிடிப்பது சாத்தியமில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் ட்ராவிட் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

ஒரு மாதத்திற்கு மேல் விளையாட்டு வீரர்கள், விளையாட்டு அணிகளின் அதிகாரிகள் மற்றும் விளையாட்டு போட்டியுடன் தொடர்புடைய நபர்கள் அனைவரையும் தனிமைப்படுத்துவது சாத்தியமில்லை என்றும் ராகுல் ட்ராவிட் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், ஐ.பி.எல் போட்டிகள் குறித்த கட்டுப்பாடுகள், புதிய அறிவிப்புகள் பல மட்டங்களில் விவாதப்பொருளாகி உள்ளது.

எனவே இந்த முறை ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் முந்தைய ஆண்டுகளை காட்டிலும், மிகவும் வித்தியாசமானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை, மைதானத்தில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டால் அது திருவிழாவாகவும் மாற வாய்ப்புள்ளது. இவ்வளவு குழப்பங்களுக்கு மத்தியிலும் இந்த கொரோனா பொது முடக்கத்திற்கு பிறகு நடைபெறும் மிகப் பெரிய விளையாட்டு போட்டியாக ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கருதப்படுகிறது.Advertisement