நுவரெலியா மாவட்டத்திலும் கொவிட் - 19 தொற்று

 


(க.கிஷாந்தன்)

நுவரெலியா மாவட்டத்தின் 13 பொது பரிசோதகர் பிரிவுகளில் இதுவரை 25 பேர் கொவிட் - 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக மாவட்ட சுகாதார பணிப்பாளர் டாக்டர். இமேஷ் பிரதாப சிங்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் 29.10.2020 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த தகவலை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று வரை பேலியகொட தொத்தணியுடன் தொடர்புடைய 25 கொவிட் – 19 தொற்றாளர்கள் நுவரெலியா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கு முன்னர் பிரண்டிக்ஸ் கொத்தணியுடன் தொடர்புடைய 8 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இவர்களுடன் தொடர்பில் இருந்த 1041 பேர் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 520 பேர் இருவார தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளனர். இவர்களுக்குள் ரிகில்லகஸ்கட வைத்தியாசாலையினரும் அடங்குகின்றனர்.

இவர்கள் தொடர்பான பீ.சீ.ஆர் பரிசோதனை நாளைய தினம் கிடைக்கவுள்ளது. எவ்வாறாயினும் பேலியகொட மற்றும் மினுவாங்கொட தொத்தணியுடன் தொடர்புடைய முதல் தொற்றாளர்கள் என கருதப்படும் 769 பேருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் மாவட்டத்தில் கொவிட் 19 பரவல் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் இருந்து நுவரெலியாவுக்கு வருவோர் தமது பயணங்களை தொடந்ந்தும் மட்டுப்படுத்த வேண்டும் அப்படியானால் எம்மால் நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். தீபாவளி பண்டிகைக்காக அதிகளவானவர்கள் நுவரெலியாவுக்கு வந்தால் சுகாதார பிரிவினர் அசௌகரியத்திற்கு உள்ளாவர். அவ்வாறு பெருந்தோட்ட பகுதிக்கு எவரும் தொற்றுடன் வந்தால் நிலைமை மோசமடையும். தற்போது வலப்பனை, மஸ்கெலியா மற்றும் மல்தெனிய ஆகிய வைத்தியசாலைகளை கொவிட் 19 தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்க தயார்ப்படுத்தி வருகின்றோம்.

தற்போது மாவட்டத்தில் உள்ள தொழிற்பயற்சி நிலையம் ஒன்றை சிகிச்சையளிக்க பயன்படுத்தி வருகின்றோம். அதேபோல் ஸ்ரீபாத கல்வியர் கல்லூரியும் சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. அதில் 250 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது பேலியகொட கொத்தணியில் இருந்து வந்தவர்கள் குறிப்பிடதக்களவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். எனினும் அவர்களுடன் நெருங்கி பழகியவர்களின் மூலம் மீண்டும் தொற்று ஏற்பட கூடும். நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் நாளொன்றுக்கு 60 – 100 வரையான பீ.சீ.ஆர் பரிசோதனைகள் இடம்பெறுகின்றன. ஒரு இயந்திரம் மாத்திரமே உள்ளது. இது போதாது எனவே அதற்கான வசதிகள் கிடைத்தால் இன்னும் அதிகமான பரிசோதனைகளை நடத்த முடியும். மஸ்கெலியா, அட்டன் பகுதி மக்களை அவர்களின் மொழியிலேயே தெளிவுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். மக்கள் ஒன்று கூடுவதை தவிர்ப்பது நல்லது அத்துடன் முழுமையான சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது முக்கியம் என்றார்