மனம் மாறினார்,மனோ


 மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்கும் கோரிக்கை மீது முன்பு வழங்கிய தனது ஆதரவை தமிழ் முற்போ்ககு கூட்டணியின் தலைவர் மனோ கணேஷன் திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியிடம் அளித்த கோரிக்கை மனுவில், எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேஷன் உள்ளிட்ட அந்த கூட்டணியின் உறுப்பினர்கள் சிலர் கையெழுத்திட்டிருந்த நிலையில் அது மிகப்பெரிய விவாதமாக மாறியிருந்தது.

முன்னர் அவரது பொதுமன்னிப்புக்கு ஆதரவாக விடுத்த கோரிக்கையை நியாயப்படுத்திய மனோ கணேஷன், துமிந்த சில்வா, பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர மீது துப்பாக்கி சூடு நடத்தும் சந்தர்ப்பத்தில் அவர் மது போதையில் இருந்துள்ளதாகவும், அவர் 5 வருடங்களை சிறைச்சாலையில் கழித்துள்ளதாகவும் கூறியிருந்தார்.

ஐந்து வருடங்களை, சிறையில் கழித்த துமிந்த சில்வா, அங்கே சீர்திருத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் தனது அறிக்கையில் மனோ கணேஷன் கூறியிருந்தார்.

இதனால், துமிந்த சில்வாவிற்கு சமூகத்துடன் வாழ சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என மனோ கணேஷன் வலியுறுத்தியிருந்தார்.

  மேலும் அந்த அறிக்கையில் அரசியல் சார்ந்த குற்றச் செயல்களில் ஈடுபட்ட தமிழ் கைதிகளும் சிறைகளில் உள்ளார்கள் என மனோ கணேஷன் கூறிய கருத்துக்கு, சமூக வலைதளங்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் மத்தியில் கடும் விமர்சனம் காணப்பட்டது.

  மனோ

  தமிழ் அரசியல் கைதிகள் குற்றம் இழைத்ததாகவே மனோ கணேஷன் தனது அறிக்கையில் கூறியிருந்ததை சுட்டிக்காட்டி, அவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வந்தது.

  துப்பாக்கி சூடு நடத்தப்படும் சந்தர்ப்பத்தில் துமிந்த சில்வா மது போதையில் இருந்துள்ளார் எனவும், தமிழ் அரசியல் கைதிகள் குற்றம் இழைத்தவர்கள் எனவும் மனோ கணேஷன் பொது வெளியில் கருத்து வெளியிட்டமையே அந்த விமர்சனங்களுக்கான காரணமாக அமைந்தது.

  இவ்வாறாக வெளியான விமர்சனங்களை அடுத்து, கொழும்பில் வியாழக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பின்போது, மனோ கணேஷன் தமது நிலை குறித்து தெளிவூட்டினார்,.

  தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை உறுதிப்படுத்துவதற்காகவும், அவர்களின் பிரச்சனையை தேசிய அரங்குக்கு கொண்டு செல்வதற்காகவே துமிந்த சில்வாவின் பொது மன்னிப்பு மனுவில் கையெழுத்திட்டதாகவும் அவர் கூறினார்.

  ஆனால், தனது நிலைப்பாட்டை பலரும் தவறுதலாக புரிந்து கொண்டதன் காரணமாக, துமிந்த சில்வாவின் விடுதலைக்கு தெரிவித்த ஆதரவை திரும்பப் பெற்றுக்கொள்வதாக மனோ கணேஷன் தெரிவித்தார்.  Advertisement