பனங்காடு பிரதேச வைத்தியசாலையில்



 வி.சுகிர்தகுமார்  


  பலவருடங்களாக புதிய கட்டட வசதிகளின்றி செயற்பட்டு வந்த அம்பாரை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் இரு மாடி கட்டடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

ஆரம்ப நிலையில் உள்ள வைத்தியசாலைகளை பலப்படுத்தும் திட்டத்திற்கமைய  உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த இரு மாடி கட்டடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் சகீல் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ரஜாப், திட்டமிடல் பிரிவின் பொறுப்பதிகாரி வைத்தியர் மாஹிர் தொழிநுட்ப உத்தியோகத்தர் ஜவாத் மற்றும் வைத்தியர் ஜாரிய பீபி உள்ளிட்ட வைத்தியசாலை ஊழியர்கள் வைத்தியசாலை அபிவிருத்தி குழ உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு உறுப்பினரும் பிசியோ திரபி வைத்தியருமான கரனின் பூஜை வழிபாடுகளோடு ஆரம்பமான நிகழ்வில் முதல் கல்லிணை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணன் நாட்டி வைத்ததுடன் தொடர்ந்து ஏனைய அதிதிகளும் அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.

இதன் பின்னராக இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த வைத்தியசாலையின் பல்வேறு அபிவிருத்தி பணிகளில் ஈடுபடு;த்தி வருகின்ற பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை அனைவரும் பாராட்டி பேசினர். மேலும் அபிவிருத்தி முயற்சியில் அயராது பாடுபட்டுவரும் வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்களையும் பாராட்டினர்.

இதேநேரம் இங்கு உரையாற்றிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறித்த வைத்தியசாலையின் சகலவிதமான அபிவிருத்திகளுக்குமாக 5கோடி ரூபா உலக வங்கியினால் ஒதுக்கீடு செய்து பரிந்துரைக்கப்பட்ட நிலையில் முதற்கட்டமாக 37 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

தொடர்ந்தும் இவ்வைத்தியசாலையின் அபிவிருத்தி பணிகளில் தாம் அக்கறையுடன் செயலாற்றுவதாகவும் இதற்கு உந்து சக்தியாக இருக்கும் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினரையும் பாராட்டி பேசினார்.