கல்முனை சுகாதார பிரிவில் #COVID19LKA எண்ணிக்கை 65 ஆக உயர்வு

 


அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 ஆகவும் கல்முனை சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரிவில் 65 ஆகவும் உயர்வடைந்துள்ளது.

கடந்த நாட்களில் அக்கரைப்பற்றில் 31பேர் கொரோனா தொற்றுடையவர்களாக அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் நேற்றும் 5 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தகவலை மேற்கோள் காட்டி ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் உறுதிப்படுத்தினார்.

புதிதாக அடையாளப்படுத்தப்பட்டவர்களில் 4பேர் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கும் ஒருவர் ஆலைடியவேம்பு பிரதேச சுகாதார பணிமனைக்குட்பட்டவர் எனவும் அவர் கூறினார்.

அடையாளம் காணப்பட்டவர்கள் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த நபர்களின் குடும்பங்களும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.

இதேநேரம் தொற்று மேலும் அதிகரிக்கலாம் என கூறிய அவர் புதிய நோயாளிகள் கண்டுபிடிக்கப்படும் இச்சந்தர்ப்பத்தில் மக்கள் முகக்கவசம் அணிவதை இறுக்கமான முறையில் கடைப்பிடிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இரு சாராரும் முகக்கவசம் அணிவதன் மூலமும் சமூக இடைவெளி பேணப்படும் சந்தர்ப்பத்திலும் பெரும்பாலும் 90 வீதத்திற்கு மேல் நோய் தொற்று ஏற்படுவதை தவிர்க்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆகவே பொதுமக்கள் வீணாக வெளியேறுவதை தவிர்த்து சுகாதார துறையினருக்கு ஒத்துழைப்பை வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
Advertisement