ஆலையடிவேம்பில் 100 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன



 சுகிர்தகுமார் 0777113659  


  அம்பாரை மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று தெற்கு தாழ் நில பிரதேசத்தில்; வாழும் மக்கள் இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இவ்வாறு ஜந்து கிராமங்களை சேர்ந்த 100 குடும்பங்கள் இடம்பெயர்ந்து  உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தெரிவித்தார்.

இந்நிலையில் இடப்பெயர்வுகளும் இடம்பெற்று வருகின்றது. இருந்தபோதிலும் தற்போது எமது நாடும் பிரதேசமும் எதிர்கொண்டுள்ள கொரோனா தொற்று நோய் தொடர்பிலும் நாம் கவனம் செலுத்த வேண்டியவர்களாக உள்ளோம். இதேநேரம் எமது பிரதேசத்திலிருந்து கொரோனா தொற்று சற்று அகன்று செல்லும் நிலையில் இருந்தாலும் புதிய புதிய வைரஸ் தொற்று நோய்களும் உருவாகி வருகின்றது.
ஆகவே நாம் மீண்டும் தொற்று நோய்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களை உருவாக்கக் கூடாது.
எனவே இடம்பெயர்வுகளை எதிர்கொண்டுள்ள மக்கள் முடிந்தவரையில் தங்களது நண்பர்கள் உறவினர்களின் வீடுகளில் பாதுகாப்பான முறையில் தங்குமாறு கேட்டுக்கொள்வதுடன் தகவல்களை கிராம உத்தியோகத்தர்களிடம் வழங்குங்கள். அவ்வாறு வழங்கும் பட்சத்தில் உங்களுக்கான உலர் உணவுப்பொதியை வழங்க பிரதேச செயலகம் தயாரான நிலையில் உள்ளது.
ஆயினும் இடம்பெயர்வுகள் ஒரே இடத்தை நோக்கியதாக அமையக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள். ஏனெனில் கொரோனா தொற்று அல்லது வேறு ஏதேனும் தொற்று ஏற்பட்டால் ஒட்டுமொத்தமாக அனைவரும் பாதிப்படையலாம்.
ஆகவே நிலைமைய அறிந்து இக்காலத்தில் மக்கள் பொறுப்புடன் செயற்படுமாறும் கேட்டுக்கொண்டார்.

பெய்து வரும் அடை மழையினால் மாவட்டத்தின் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, திருக்கோவில், பொத்துவில், கல்முனை, நிந்தவூர், அம்பாரை, உள்ளிட்ட பிரதேசங்களின் தாழ் நில பிரதேசங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் தொடர்ந்தும் மழை பெய்துவருகின்றது.

இதேநேரம் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மகோயா பிரதேசத்தில்  அதிகூடிய 62.3 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொத்துவில் வானிலை அவதான நிலைய கடமைநேர அதிகாரி  எம்.ஏம்.எம். சாதிக் தெரிவித்தார்.

இன்று காலை 8.30மணியுடன் முடிவடைந்த 24மணித்தியாலங்களுக்குள் அம்பாரையில் 57.4 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் லாகுகல பிரதேசத்தில் 52.4; மழை வீழ்ச்சியும் அக்கரைப்பற்றில் 45.1 வீத மழை வீழ்ச்சியும் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய பிரதேசங்களிலும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் கூறினார்.  

பெய்துவரும் அடை மழையினால் சாகாமம் பிரதான வீதியின் கூளாவடி பிரதேசத்திற்கு அன்மித்த தாம்போதி மேலாக வெள்ளம் பாய்ந்து வருகின்றது.

இதனால் அலிக்கம்பை கூளாவடி சாந்திபுரம் கிராமங்களில் வாழும் மக்களும் குறித்த பிரதேசங்களில் வாழும் விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 
வீதிகளும் குடியிருப்புக்களும்; வெள்ளத்தால் மூழ்கியுள்ளதுடன் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
 
மூன்று தினங்களுக்கு முன்னர் ஆரம்பித்த மழை வீழ்ச்சி இன்று காலை வரை நீடித்து வரும் நிலையில் சில குடியிருப்புகளிலும் நீர் புகுந்துள்ளது.