இரண்டாம் கட்ட நிவாரணப்பணி


 


வி.சுகிர்தகுமார் 0777113659 


  அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்;பு பிரதேச செயலாளர் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இரண்டாம் கட்ட உலர் உணவுப்பொதி வழங்கும் நிவாரணப்பணி நிறைவடைந்துள்ளதாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தெரிவித்தார்.

ஆலையடிவேம்பில் உள்ள 8411 குடும்பங்களில்   6454 குடும்பங்களுக்கான தலா 10ஆயிரம் ருபா பெறுமதியான 06 கோடியே 45 இலட்சத்து  40ஆயிரம்  ரூபா பெறுமதியான பொருட்கள் பிரதேச செயலகத்தால் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக 6056 குடும்பங்களுக்கு அனுமதி கிடைக்கப்பெற்றதுடன் மக்கள் வழங்கிய மேன்முறையீட்டு படிவங்களுக்கு அமைய 398 குடும்பங்களுக்கான மேலதிக அனுமதி கிடைக்கப்பெற்றதாகவும் தெரிவித்த அவர் இவ்வாறு அனுமதி பெற்ற அனைவருக்கும் உலர் உணவுப்பொதி வழங்கிவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதை தவிர கொரோனா தொற்றுடன் தொடர்புபட்ட சுயதனிமைப்படுத்தப்பட்ட 434  குடும்பங்களுக்கான 5000 ரூபா பெறுமதியான பொருட்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவை அனைத்தும் அரசாங்கத்தின் கொள்கை பிரமாணங்களுக்கு அமைய ஜனாதிபதியின் உத்தரவின்பேரில் பிரதமர் அலுவலகத்தின் சுற்று நிருபங்களுக்கு அமைய மாவட்ட செயலாளர் டி.எம்.எல். பண்டாரநாயக்கவின் ஒத்துழைப்புடனும் கண்காணிப்பிலும் மக்களுக்கு வழங்கப்பட்டதாகவும் கூறினார்.

இதேநேரம் இந்நடவடிக்கையினை முறையாக கொண்டு செல்ல ஒத்துழைப்பு வழங்கிய அரசுக்கும் மாவட்ட செயலாளர் டி.எம்.எல். பண்டாரநாயக்க அவர்களுக்கும் அம்பாரை பிரதேச செயலக பிரதேச செயலாளர் மற்றும் அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்கள் ஆலையடிவேம்பு பிரதேச செயலக பதவிநிலை அதிகாரிகள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் பங்கிடல் நடவடிக்கைக்கு உதவிபுரிந்த பொது அமைப்புக்கள் வாகன உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

விசேடமாக தனிமைப்படுத்தல் காரணமாக உள்ளுரில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலையில் அம்பாரையில் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையங்களிலிருந்து பொருட்களை கொள்வனவு செய்து பிரதேச செயலகத்தில் வைத்து 6000 பொதிகளை பொதியிடல் செய்து அனுப்பி வைத்த அம்பாரை பிரதேச செயலக பிரதேச செயலாளர் சொய்சா மற்றும் 2800 பொதிகளை வழங்கிய அம்பாரை ப.நோக்கு.கூட்டுறவு சங்கம் 2600 பொதிகளை வழங்கிய மகோயா ப.நோக்கு.கூட்டுறவு சங்கம் மற்றும் உள்ளுர் மொத்த வியாபார விற்பனை நிலையங்களும் நன்றி கூறினார்.
வழங்கி வைக்கப்பட்ட உலர் உணவுப் பொதியில் அரிசி சீனி பருப்பு கோதுமைமா பால்மா பைக்கற் மற்றும் பெண்களுக்கான கைஜின் பொருட்களும் அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.