நடவடிக்கை


 


(க.கிஷாந்தன்)

 

லிந்துலை பிரதேசத்திலுள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நடவடிக்கை எடுத்தார்.

 

நுவரெலியா  மாவட்டத்தில் லிந்துலை பிரதேசத்திலுள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று 28.12.2020 அன்று லிந்துலையில் நடைபெற்றது.

 

இதன்போது, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறியப்பட்டது.

 

இதன்போது, விவசாயிகளிடமிருந்து, விவசாய அமைச்சு நேரடியாகவே காய்கறிகளை கொள்வனவு செய்வது குறித்தும், இத்திட்டத்தை முன்னெடுக்கும்போது எழக்கூடிய பிச்சினைகள் சம்பந்தமாகவும் இதன்போது ஆராயப்பட்டதுடன், விவசாயிகளின் யோசனைகளும் உள்வாங்கப்பட்டன.

 

தாம் உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டாலும் இடைத்தரகர்களே அதிக இலாபம் ஈட்டுகின்றனர். எனவே, இதற்கு எதிராக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என இச்சந்திப்பில் விவசாயிகள் உறுதியளித்துள்ளனர்.

 

குறிப்பாக கொழும்பிலே ஒரு கிலோ லீக்ஸ் 100 ரூபாவுக்கு விற்கப்படுகின்றதெனில் தம்மிடமிருந்து 20 முதல் 25 ரூபாவுக்கே லீக்ஸ் கொள்வனவு செய்யப்படுகின்றது எனவும், தரகர்கூலி, போக்குவரத்து செலவு ஆகியவற்றை கழித்தால் இறுதியில் ஒரு கிலோவுக்கு தமக்கு 12 ரூபாவே எஞ்சுகின்றது எனவும் விவசாயிகள் சுட்டிக்காட்டினர்.

 

எனவே, அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் புதிய வேலைத்திட்டம் வெற்றியளிக்கவேண்டுமெனில் எவ்வாறு அத்திட்டம் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் விவசாயிகள் ஆலோசனைகளை முன்வைத்தனர். 

 

அத்துடன், லிந்துலை பகுதியில் விவசாயிகளின் விளைச்சலை சேகரிப்பதற்கு மத்திய நிலையமொன்று அமைக்கப்படவேண்டும், உரம் வகைகளை சேமிப்பதற்கு களஞ்சியசாலை அவசியம் என விவசாயி அபிவிருத்தி அதிகாரிகள் இச்சந்திப்பின்போது கோரிக்கை விடுத்தனர்.

 

இதனை நிறைவேற்றுவதற்கு விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நடவடிக்கை எடுத்தார்.