க. பொ. இரத்தினம் அன்றே எதிர்த்த பஸ் பெயர்ப்பலகை விவகாரம்!


 


யாழ் பஸ் நிலையமும் யாழ் பல்கலைக் கழகமும்

க. பொ. இரத்தினம் அன்றே எதிர்த்த பஸ் பெயர்ப்பலகை விவகாரம்!
—————————————————
யாழ் பஸ் நிலையத்தின் பெயர்ப்பலகையில் சிங்களத்திற்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளமையால் ஏற்பட்டுள்ள சர்ச்சைகள் பற்றிய செய்திகள் வருகின்றன.
யாழ் மாநகரசபையில் இது தொடர்பாக உறுப்பினர்கள் மாநகரமுதல்வரிடம் கேள்வி எழுப்பும் காட்சிகளைக் காணமுடிகிறது.
1970 களில் பதவிக்கு வந்த ஶ்ரீமாவோ வின் ஶ்ரீலசுக, கம்யூனிஸ்ட், சமசமாஜக் கட்சிகளின் கூட்டணியான அரசாங்கம் வந்தவுடன் முதலில் செய்தவேலை இலங்கைப் போக்குவரத்துச் சேவை பஸ்களில் -அவற்றில் , பக்கவாட்டாக நீலக்கோடுகளைப் போட்டமையாகும்.
ஆனால் அரசாங்கம் அத்துடன் நிறுத்தவில்லை. பஸ்கள் குறிப்பிடும் ஊர்களின் பெயர்ப்பலகைகளில் பெரிய மாற்றத்தைச் செய்தது.
ஆட்சி மாறிய வேளையில் புதிய அரசு தமிழர் பிரச்சினை தொடர்பாக பண்டா செல்வா ஒப்பந்த அடிப்படையிலோ அதையண்டியோ தமிழ்க் கட்சிகளுடன் பேசலாம்ஏதோ செய்யலாம் என்றிருந்த வேளையில், அது செய்த அந்த முதல் வேலை தமிழரசுக் கட்சியினரையும் குறிப்பாக இளைஞர்களையும் உணர்ச்சிபெற்று எழச்செய்தது.
இதற்கு முன்னர் இ் போ ச பஸ்களில் பஸ்கள் பயணிக்கும் இடங்களின் பெயர்கள் ஓரேயளவில் இருந்தன.
வடக்கிலும் கிழக்கிலும் தமிழில் மேலேயும் அடுத்து சிங்களத்திலும் அடுத்து ஆங்கிலத்திலும் இருந்தன.
சிறிமா அரசு வந்தவுடன், பெயர்ப்பலகையில் மாற்றம் இலங்கை முழுவதற்கும் ஒன்றானது.
உதாரணமாக 750 பஸ்ஸில் பேதுருதுடுவ என நான்கு அங்குல அளவில் சிங்களத்திலும், அதன் கீழே ஒரே வரியில் இரண்டு அந்தங்களுமாக தமிழிலும் ஆங்கிலத்திலும் பருத்தித்துறை, Point Pedro என ஓரலங்குல அளவிலுமாகப் பலகைகள் எழுதப்பட்டன.
பாராளுமன்றத்தில் காவலூர் எம் பி பண்டிதர் க பொ இரத்தினம் இதனை வன்மையாகக்கண்டித்துப் பேசினார்.
போக்குவரத்து மக்களின் அடிப்படை உரிமை. அவர்களின் வாழ்வோடும் பண்பாட்டோடும் இணைந்தவை. கிராமத்திலுள்ள குடியானவர்களின் முக்கியமான சாதனம் பஸ் ஆகும்.
வடக்கிலும் கிழக்கிலுமுள்ள சாதாரண மக்கள் வாசிக்கக்கூடிய மொழி தமிழ் மொழியே. இந்த மக்களைச் சிங்களம் படிக்கச் சொல்கிறீர்களா? என்ற சாரப்பட வினா எழுப்பினார்.
( பண்டா - செல்வா ஒப்பந்தம் கிழிக்கப்பட்ட போதும்) பண்டாரநாயக்கவோடு பேசிக் கொண்டுவரப்பட்ட 1958 தமிழ்மொழி உபயோகச் சட்டத்தைக் கூட ஶ்ரீமாவோ அரசாங்கம் உதாசீனம் செய்வது ஒரே மொழியின் நிருவாகத்துக்குள் நாட்டைக் கொண்டுவருவதற்கா எனவும் அவர் கேட்டிருந்தார்.
அரசாங்கம் அது தொடர்பாக எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.
கவனத்தில் எடுக்கவில்லை.
ஊர்காவற்துறை பஸ் டிப்போ திறப்பு விழாவுக்கு சிறிமா அரசின் தபால் தந்தி தொடர்புகள் அமைச்சர் செல்லையா குமாரசூரியர் கலந்துகொள்ள வந்தபோது கறுப்புக் கொடி எதிர்ப்புக் காட்டப்பட்டது. சிறிமா அரசாங்கத்தில் முதல் எதிர்ப்பு பஸ் டிப்போவுடனேயே ஆரம்பமானது.
இளைஞர்கள் தமிழ்த்தலைவர்களான அமிர்தலிங்கம், க பொ இரத்தினம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது யாழ் பொலிஸ் அதிபராகவிருந்த மித்ர ஆரியசிங்க அமிர்தலிங்கத்தை அணுகி, நீங்கள் என்ன ஆர்ப்பாட்டத்தையும் செய்யுங்கள் ஆனால் சற்றுத் தள்ளி நின்று செய்யுங்கள். நான் எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டேன் என்று சொல்லி- இளையோர் எதிர்ப்பையும் , அமைச்சரின் வருகையையும் சுமுகமாக இடம்பெற வைத்ததாக மித்ர ஆரியசிங்க பற்றி ஒரு சுவையான கதையுமுண்டு.
(மித்ர எம்முடன் பிற்காலத்தில் சக்தி ஊடகத்தின் நிர்வாகப் பணிப்பாளராகப் பணியாற்றியவர்)
இதன் பின்னர் புதிய அரசியலமைப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
அதை வரைந்தவர் இலங்கையின் புகழ்மிக்க இடதுசாரித் தலைவரான கொல்வின் ஆர் டி சில்வா.
தமிழ்மக்களின் சனநாயக அவாவினை விளங்காமலே அதை அரசாங்கம் உருவாக்கியமை இளையோர் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியது.
ஆக ஆறு கோரிக்கைகளையே புதிய அரசியலமைப்பில் தங்கள் யோசனைகளாக, தமிழர் ஐக்கிய முன்னணி கோரியிருந்தது.
அதில் தமிழ் ஈழமோ மாநில சுயாட்சியோ தரும்படி கேட்கப்படவில்லை.
செல்வநாயகம், பொன்னம்பலம், தொண்டமான் ஆகியோர் தலைமையில் உருவான தமிழர ஐக்கிய முன்னணி முன் வைத்த கோரிக்கைகள் எவையென்று பாருங்கள்:-
1. சிங்கள மொழிக்கு வழங்கப்படும் சலுகை தமிழ் மொழிக்கும் வழங்கப்படவேண்டும்.
2. இந்த நாட்டை வாழிடமாக்க் கொண்ட சகல தமிழ்பேசும் மக்களும் குடியுரிமை உடையவர்கள்
3. அரசு மதசார்பற்ற அரசாக இருப்பதுடன் எல்லா மதங்களின் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும்
4. சகல மக்களையும் அவர்களின் இனக்கலாசார அடையாளங்களுக்கு அப்பால் சமமானவர்களாக உறுதிப்படுத்தல் வேண்டும்
5.சாதியமும் தீண்டாமையும் அரசியலமைப்பினூடாக ஒழிக்கப்படவேண்டும்.
6.சனநாயகப் பண்புகொண்ட சமவுடமைச் சமுதாயத்தில் அதிகாரம் அரசிடமில்லாமல், பன்முகப்படுத்தப்பட்ட அரசாங்கக்கட்டமைப்பினூடாக உறுதிப்படுத்தல் வேண்டும்
அந்த நாகரிகமான கோரிக்கைகளையே சிறிமாவோ அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதனால் அவர்ரகள் அரசியலமைப்பு நிர்ணய சபையிலிருந்து விலகினர்.
1974 இல் தரப்படுத்தலை சிறிமா அரசாங்கம் கொண்டுவந்தது.
1960 களிலிருந்தே தமிழர்கள் கூடுதலான விகிதாசாரத்தில்
பல்கலைக்கழ்ழகங்களுக்கு அனுமதிக்கப்படுகிறார்கள் என்ற புகார் இனவாதிகள் மத்தியிலிருந்து எழுந்தது.
தேர்தல் காலப்பகுதியில் அவர்களுக்கு வழங்கிய உத்தரவாதப்படி, ஐக்கியமுன்னணி அரசாங்கம் தரப்படுத்தலைக் கொண்டுவந்தது.
பஸ்களில் பெரிய சிங்கள எழுத்தில் பெயர்ப்பலகை போட்டதைப்போலவே, ஶ்ரீலசுக, சமசமாஜ, கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்த ஐக்கியமுன்னணி அறிமுகம் செய்த புதிய கல்விக்கொள்கையான இத்தரப்படுத்தல் தமிழரசு வாலிப முன்னணி என்று மட்டுமிருந்த இளைஞர் அரசியலில் தமிழ் மாணவர் பேரவை என்ற பரிணாமத்தைத் தோற்றுவித்தது.
தரப்படுத்தலை மூத்த தலைவர்களைவிட மாணவர் பேரவையினரே வீதியிலிறங்கி எதிர்த்தனர் எனலாம்.
இந்த வேளையிற்தான் இலங்கைப் பல்கலைக்கழகத்திற்கான யாழ் வளாகம் திறக்கபடும் திட்டத்தை ஶ்ரீமாவோ அரசு அறிவித்தது.
இதற்கிடையில் ஒரு கதை உண்டு. தந்தை செல்வநாயகம் புதிய அரசு வந்த வேளை அதன் கல்வியமைச்சராகப் பதவியேற்ற அல்ஹாஜ் பதியுதீன் மகமுத்திடம் திருகோணமலையில் பல்கலைக்கழகம் அமைக்க முயலுமாறு கேட்டுள்ளார். அப்போது பதியுதீன் - நான் அதைச் செய்தால், பொன்னம்பலம் என்னைக் கோபிப்பாரே என்று சமாளித்துள்ளார்.
ஜீ ஜீ பொன்னம்பலம் இந்துப்பல்கலைக்கழகம் ஒன்று , அது யாழில் அமையவேண்டும் எனக்கேட்க, தமிழ்ப்பல்கலைக்கழகம் - அது திருகோணமலையில் அமையவேண்டும் எனக் கோரியமை பழைய கதை.
ஆனால் ஜீ ஜீ யின் காங்கிரசோ, செல்வாவின் தமிழரசோ இலங்கைத் தமிழரசியல் வரலாற்றில் முக்கிய வகிபாகத்தை வழங்கப்போகின்ற ஒரு மாபெரும் சமூக்க்காரணிக்காகத் தான் தாங்கள் அடிபடுகிறோம் என்று ்அன்று யோசிக்கவில்லை.
ஐம்பதுகளில் தமிழரசுக்கட்சி பிரதமர் டட்லியிடம் முன்வைத்த முக்கியமான கோரிக்கைகள் இரண்டு .
1. தமிழ்ப் பல்கலைக்கழகம்
2. திருக்கோணேஸ்வர ஆலயத்திலிருந்து இராணுவத்தை நீக்கல்
என்பன
இவற்றில் தமிழ்ப்பல்கலைக்கழகக் கோரிக்கை வலுப்பெற்றது.
இதற்காக தமிழ்க்கல்விமான்களும் புத்திஜீவிகளும் சேர்ந்து தமிழ்ப் பல்கலைக்கழக இயக்கத்தை ஆரம்பித்தனர்.
தமிழ்ப் பல்கலைக்கழக இயக்கம் என்று ஒரு நூலை நான் எண்பதுகளில் ஈழநாடு கொழும்பு அலுவலகத்தில் பார்த்திருக்கிறேன்.
அந்த அலுவலகம் என்பது ஈழநாடு அதிபர், நிறுவனர் கே சி தங்கராஜாவின் இல்லம் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது சகோதரர் கே சி சண்முகரட்ணத்தின் புதல்வர் ராஜன் தான் தற்போது வெளிவரும் ஈழநாட்டின் பொறுப்பான பதவியிலுள்ளார். ராஜன் முன்பு மகாராஜா நிறுவனத்திலும் பணியாற்றியவர்.
நான் ரூபவாஹினியில் பணியாற்றிய நாட்களில் ஈழநாடு கொழும்பு அலுவலகமான அந்த இல்லத்திற்குப் போய் அங்கு அதன் கொழும்புச் செய்தியாளர்களாகப் பணியாற்றிய கந்தசாமி , பெஞ்சமின் ராஜரட்ணம் ஆகியோரைச் சந்திப்பது வழக்கம்.
இந்தத் தமிழ்ப் பல்கலைக் கழக இயக்கத்தினர் தமிழர்களுக்கான ஒரு பல்கலைக்கழகம் உருவாவதற்காக பணம் திரட்டினர்.
திருகோணமலையில் காணியொன்றை வாங்கி அத்திவாரமும் இட்டனர்.
வெள்ளவத்தையில் கல்லூரி ஒன்றையும் ஆரம்பித்தனர்.
தமிழரசுக்கட்சியினர் இந்தத் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு ஆதரவளித்ததாக மூத்த ஊடகவியலாளர் அமரர் த சபாரத்தினம் தெரிவிக்கிறார்.
இன்று ஜெனீவாப் பிரச்சினைபோல் தமிழ்மக்களுக்கான பல
கலைக்கழக விடயத்தில் அன்றிருந்த தமிழ்க்கட்சிகளுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் நிலவின.
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் இந்துப் பல்கலைக் கழகக் கோரிக்கையை முன்வைத்தமைக்கு ஜீ ஜீ ஒரு காரணத்தையும் சொன்னதாகத் தகவலுண்டு.
அவர்கள் தமிழ்ப் பல்கலைக் கழகம் எனக் கேட்டால் தரமாட்டார்கள் , இந்துப் பல்கலைக் கழகம் என்று கேட்டால் தருவர் - என கொங்கிரசின் தலைவர் ஜீ ஜீ தமது ஆதரவாளர்களுக்குத் தெரிவிவித்தார்.
தமிழ்ப் பல்கலைக் கழக விடயத்தில் யு என் பியும் ஶ்ரீ ல சு கட்சியும்
ஒரே நிலைப்பாட்டிலேயேயிருந்தன.
அக்கறை காட்டவில்லை.
1970 இல் ஆட்சிக்கு வந்த சிறீமாவோ அரசு யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தை ஆரம்பித்தது.
சேர் பொன் இராமநாதன் 1921 இல் நிறுவிய பரமேஸ்வராக் கல்லூரியிலேயே இது ஆரம்பிக்கப்பட்டது.
தமிழ்மக்களின் கல்வி தொடர்பான தூரநோக்கில் அவர்
இக்கல்லூரியை நிறுவியமைக்குப்பின்னாலும் பெரிய கதை உண்டு.
தமிழர்களுக்கான பல்கலைக்கழகம் தமிழ்ப் பல்கலைக்கழக இயக்கம்
போன்ற எழுச்சிகளின் மத்தியிற் தான் சிறீமா அரசாங்கம் பதவிக்கு வந்த சில ஆண்டுகளில், 1974 இல் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தை திறந்தது.
1972 இல் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகத் தெரிவான அருளம்பலம் , தியாகராஜா ஆகியோர் காங்கிரஸிலிருந்து பிரிந்து அரசில் இணைந்தவர்கள். தங்கள் தலைவர் ஜீ ஜீ வழியிலேயே ஒற்றையாட்சியின் கீழ் அபிவிருத்தியை மேற்கொள்ள அரசுக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் ஆதரவளித்தால் பிழையில்லை, நாங்கள் ஆதரவளித்தாற்தான் தவறா என தியாகர் அரசுடன் இணைந்தபின்னர் அவரது ஊரான காரைநகரில் இடம் பெற்ற வரவேற்பு வைபவத்தில் பேசும்
போது உரையாற்றினார்.
ஆனால் ஜீ ஜீ பொன்னம்பலம் டி எஸ் அரசுடன் இணைந்து தமக்கு மந்திரிப் பதவியையும் தமது கட்சியைச் சேர்ந்த வி குமாரசாமிக்கு பிரதி மந்திரிப் பதவியையும் பெற்ற போதிலும் அந்தப் பதவிகளைப் பாவித்து வடகிழக்கில் தங்களது ஐந்தாண்டுப் பதவிக்காலத்துள் மூன்று பாரிய தொழிற்சாலைகளைத் திறந்ததுடன் , மகாவலி கங்கை திட்டத்தின் முன்னேற்பான நடவடிக்கையாக இரணைமடுத் திட்டத்தை நிறைவேற்றினார் எனவும் இவர்களைப்போல சிங்களத்தை இங்கு கொண்டுவரவில்லை எனவும் இவர்களுக்கெதிரான காங்கிரஸ் கூட்டத்தில் சிவசிதம்பரம் பேசியிருந்தார்.
தமிழ்க்காங்கிரஸைச் சேர்ந்த ஆனந்தசங்கரியும் இவர்களுடன் முதலில் அரசை ஆதரித்த போதும், ஶ்ரீமா அரசு பதவிக்கு வந்தவுடன், செய்த பேரினவாத நடவடிக்கைகளை எதிர்த்து உடனடியாகவே விலகினார்.
தமிழர் ஐக்கிய முன்னணி உருவாக்கத்தில் அமிர்தலிங்கத்தாரை ஜீ ஜீ யின் கொழும்பு இல்லத்திற்கு அழைத்துச் சென்றவர்களில் ஆனந்தசங்கரியும் ஒருவராவார்.
அப்போது அமிர்தலிங்கத்தைக் கண்ட ஜீ ஜீ “ நான் ஒரு பெரிய பிழை விட்டுவிட்டேன் ஐசே! மாஸ்டரை ( தியாகரை) உமக்கு எதிராகப் போட்டிருக்கக்கூடாது’ என்றாராம் .
இந்தச் சந்திப்பு விடயம் அன்றைய இதழ்களிலும் மலர்களிலும் வந்துமுள்ளன.
சிறிமாவால் திறக்கப்பட்ட பல்கலைக்கழக வளாகத்தை தமிழரசார் எதிர்த்தனர் இப்போ பல்கலைக்கழகம் பற்றி அழுகின்றனர்- என எழுதுகின்றனர்
இவர்
களின் எதிர்ப்பு உருவானமைக்கு நான் மேலே குறிப்பிட்ட பல பின்னணிச் சூழலே காரணமாகவிருந்தன.
சிறிமா அரசால் திறக்கப்பட்ட யாழ் வளாகத்தின் திறப்புவிழாவை தமிழர் ஐக்கிய முன்னணியைவிடத் தீவிரமாக எதிர்த்தவர்கள் தமிழ் மாணவர் பேரவையினர் என்பதே உண்மை. தரப்படுத்தலைத் தமிழ் மாணவர்களுக்கெதிராக்க் கொண்டுவந்த அரசு தமிழ்மண்ணில் உடனடியாக வளாகம் ஒன்றைத் திறப்பது சந்தேகத்தையே தோற்றுவித்தது.
பாம்பு புற்றெடுக்க கறையான் குடி புகப்போகிறது என சுதந்திரன் தலையங்கமிட்டிருந்தது.
பஸ் “போட்டிலிருந்து “ தொடங்கிய அச்சம் பல்கலைக்கழகத் திறப்பு வரையாகத் தொடர்ந்தது.
அந்த யாழ் வளாகம் பின்னர் பல்கலைக்கழகமாகி இலங்கையின் பல்கலைக்கழகங்களின் வரலாற்றில் ஏனைய பல்கலைக்கழகங்கள்போலன்றி, அதன் அமைவிற்குரிய சமூகத்தின் அரசியல் சமூகமயமாக்கலில் இணைந்துநின்ற வகிபாகம் மிக்கதாய் மாறியது எனில்,
பரமேஸ்வராக் கல்லூரி, இராமநாதன் கல்லூரி ஆகியவற்றின் உருவாக்கம், தமிழ்ப் பல்கலைக் கழக இயக்கம் எனபவனவற்றின் சிந்தனைகளின் தொடர்ச்சியே அது என்றே கூறுதல் தகும் என எண்ணுகிறேன்!