இங்கிலாந்தை 317 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா


 


சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

482 ரன்கள் இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 164 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.

சென்னையில் நடந்த 2வது டெஸ்டின் நான்காவது நாளான இன்று பேட்டிங்கில் இங்கிலாந்து தொடக்கத்தில் இருந்தே திணறி வந்தது.

தொடக்க வரிசையில் ஆடிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஜோசப் பர்ன்ஸ், டாம் சிப்லி என அடுத்தடுத்து வந்தவர்கள், இந்திய பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் தொடர்ந்து அவுட்டாகினர்.

உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களிக்க CLICK HERE

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் அதிகபட்சமாக 33 ரன்களை எடுத்தார்.

இந்த போட்டியில் அக்சர் பட்டேல் 5 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய இந்தியா

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் கடந்த (பிப்ரவரி 13, சனிக்கிழமை) காலை தொடங்கியது. டாஸை வென்ற இந்திய அணி, பேட்டிங் செய்யத் தீர்மானித்தது.

95.5 ஓவரில் இந்தியா தன் முதல் இன்னிங்ஸில் 329 ரன்களை எடுத்தது. ரோஹித் ஷர்மா 161 ரன்களையும், அஜிங்க்யா ரஹானே 67 ரன்களையும், ரிஷப் பண்ட் 58 ரன்களையும் குவித்து இந்தியா முன்னிலை வகிப்பதை உறுதிப்படுத்தினார்கள்.

சென்னை டெஸ்டில் இங்கிலாந்தை 314 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

மொயின் அலி 4 விக்கெட்டுகளையும், ஒலி ஸ்டோன் 3 விக்கெட்டுகளையும், ஜாக் லீச் 2 விக்கெட்டுகளையும், ஜோ ரூட் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். ஸ்பின்னர்கள் மட்டும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் இரண்டாவது நாளில், தன் முதல் இன்னிங்ஸுக்கு களமிறங்கிய இங்கிலாந்து 59.5 ஓவர்களில் 134 ரன்களுக்குள் சுருண்டது. பென் ஃபோக்ஸ் மட்டுமே 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மீதமுள்ள எந்த வீரரும் 25 ரன்களைக் கூடத் தாண்டவில்லை.

இந்திய விக்கெட்டுகளை மொயின் அலி மற்றும் ஜாக் லீச் என ஸ்பின்னர்கள் வீத்தியது போல, இங்கிலாந்து பேட்ஸ்மென்களின் 5 விக்கெட்டுகளை பதம் பார்த்தார் அஸ்வின். இஷாந்த் ஷர்மா, அக்ஸர் படேல் தலா 2 விக்கெட்டுகளையும், மொஹம்மத் சிராஜ் 1 விக்கெட்டையும் எடுத்தனர். போட்டியின் இரண்டாவது நாள் நிறைவடைவதற்குள்ளேயே இந்தியா தன் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கியது.

இந்தியா தன் இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் 85.5 ஓவருக்கு 286 ரன்களைக் குவித்தது. சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின், அதிரடியாக பேட்ஸ்மேனாக மாறி 106 ரன்களையும், கேப்டன் விராட் கோலி 62 ரன்களையும் குவித்தனர்.

சென்னை டெஸ்டில் இங்கிலாந்தை 317 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

பெரும்பாலும் இங்கிலாந்தின் ஸ்பின்னர்கள் மட்டுமே இந்திய பேட்ஸ்மேன்களை பெவிலியனுக்கு அனுப்பினர். ஜாக் லீச் மற்றும் மொயின் அலி தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

482 ரன்கள் எடுத்தால் வெற்றி என, இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. ஆனால் 54.2 ஓவர் முடிவில் 164 ரன்களுக்குள் இங்கிலாந்து தன் 10 விக்கெட்டுகளையும் இழந்தது.

317 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. தற்போது 1 - 1 என்கிற கணக்கில் இந்தியா தொடரை சமன் செய்திருக்கிறது. இந்த தொடரில் மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகள் வரும் வாரங்களில் குஜராத்தின் அகமதாபாத்தில் நடக்கவிருக்கின்றன.

ரஹானே சாதனை

ரஹானே (கோப்புப்படம்)
படக்குறிப்பு,

ரஹானே (கோப்புப்படம்)

இந்த இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 149 பந்துகளுக்கு 67 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 10 ரன்களையும் எடுத்த அஜிங்க்யா ரஹானே, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முந்தைய போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 1,000 ரன்களைக் கடந்த முதல் இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறார். அதோடு தன் 23-வது அரை சதத்தையும் பதிவு செய்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டிகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பட்டியலில், ஒட்டுமொத்தமாக பார்த்தால், பேட்டிங்கில் 1,061 ரன்களோடு ஐந்தாவது இடத்தில் இருக்கிறார் ரஹானே.

இந்த பட்டியலில் முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுசானேவும் (1,675 ரன்கள்), இரண்டாவது இடத்தில் இங்கிலாந்தின் ஜோ ரூட்டும் (1,589 ரன்கள்), மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தும் (1,341 ரன்கள்), நான்காவது இடத்தில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸும் (1,246 ரன்கள்) இருக்கிறார்கள்.

அஸ்வின் சாதனை

இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்திய அஸ்வின், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 50 விக்கெட்டுகளைக் கடந்த முதல் இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறார். 52 விக்கெட்டுகளுடன் ஒட்டுமொத்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் அவர் இருக்கிறார்.

சென்னையில் மையம் கொண்ட அஸ்வின் சுழல்

IND Vs ENG 2-வது டெஸ்ட்: 329 ரன்களுக்கு சுருண்டது இந்தியா; இங்கிலாந்து திணறல் ஆட்டம்

இந்தியாவில் 350 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இந்தியர் என்கிற பெருமையும் இந்த போட்டியின்போது பெற்றார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

அனில் கும்ப்ளே (476 விக்கெட்டுகள்), ஹர்பஜன் சிங் (376 விக்கெட்டுகள்) ஆகிய இரு ஸ்பின்னர்கள் தான் உள்நாட்டில் 350-க்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை ஒட்டுமொத்தமாக தன் டெஸ்ட் வாழ்கையில் 394 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் அஸ்வின். டெஸ்ட் போட்டியில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய வரலாற்று சாதனை படைத்த பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இடம் பிடிக்க, அஸ்வினுக்கு இன்னும் 6 விக்கெட்டுகளே தேவைப்படுகின்றன.

இந்தியா வெற்றி பெற்றது எப்படி?

முதல் இன்னிங்ஸில் ரோஹித் ஷர்மாவின் 161 ரன்கள், ரஹானேவின் 67 ரன்கள் மற்றும் ரிஷப் பண்டின் 58 ரன்கள் இந்தியாவை தொடக்கத்திலேயே முன்னிலை வகிக்க வைத்தன. அதோடு இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின், இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கில் 106 ரன்களைக் குவித்தது இந்தியாவின் வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது.

முதல் ஆட்டத்திலேயே கலக்கிய அக்ஸர் படேல்

தன் முதல் டெஸ்டிலேயே, ஜோ ரூட்டின் விக்கெட்டை வீழ்த்தி தன் பயணத்தைத் தொடங்கி இருக்கிறார் அக்ஸர் படேல். இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள், இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸில் ஜோ ரூட், டாம் சிப்லி உட்பட 5 விக்கெட்டுகள் என, முதல் ஆட்டத்திலேயே 7 விக்கெட்டுகள் என அக்ஸர் படேலுக்கு இந்த சென்னை டெஸ்ட் போட்டி நல்ல தொடக்கமாக அமைந்திருக்கிறது.