மரணச் சடங்கு தொடர்பான கலந்துரையாடல்

 


வி.சுகிர்தகுமார் 0777113659 

  ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் நடைபெறும் மரணச்சடங்குகளின் போது இடம்பெறும் மேலதிக செலவினை கட்டுப்படுத்தல் மற்றும் ஒரே நடைமுறையினை பின்பற்றல் மயானத்தூய்மைப்படுத்தல் தொடர்பிலான தீர்மானங்களை மேற்கொள்ளும் கூட்டம் அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலய ஒன்று கூடல் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச அனைத்து இந்து ஆலயங்களின் ஒன்றியத்தின் தலைவர் க.கிருஸ்ணமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரன் மற்றும் உறுப்பினர்கள் ஆலயங்களின் தலைவர்கள் நிருவாகத்தினர் இந்துமாமன்ற தலைவர் இந்து இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் கல்விமான்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தின் முக்கியத்துவம் பற்றி தலைவர் உரையாற்றியதுடன் பலரும் தங்களது கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

இதன்போது தற்கால கட்டத்தில் மரணச்சடங்குகளின்போது இடம்பெறும் அதிகளவான செலவுகளை குறைப்பது மற்றும் கடமை செய்யும் பணியாளர்களது கொடுப்பனவை வரையறை செய்தல் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் இறுக்கமான தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டது.

இதேநேரம் மயானம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்ட நிலையில் அதனை தூய்மைப்படுத்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன் பிரதேச சபையினூடாக இப்பணியை முன்னெடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் பிரேதங்களை மயானத்திற்குள் கொண்டு செல்கையில் வழக்கமாக பயன்படுத்திய பாதையினை பயன்படுத்த வேண்டும் என்றும் பிரேதங்களை புதைப்பது தொடர்பில் ஒரே நடைமுறையை பேணுவது எனவும் இதனை பிரதேச சபையினரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இச்செயற்பாடுகள் தொடர்பில் துண்டுப்பிரசுரம் வெளியிடுவதுடன் ஆலயங்களின் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு தெளிவூட்டப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.


Advertisement