அக்கரைப்பற்று நாவற்காடு பகுதியில் மிளகாய்த் தூள் வீசிய கள்வன் கைது


 


சுகிர்தகுமார் 0777113659   


  வீதியில் சென்று கொண்டிருந்த பெண்ணின் கண்களில் மிளகாய் தூளை வீசி தாலியினை அறுத்தெடுத்த திருடன் மக்களால் சாதுர்யமாக மடக்கிப்பிடிக்கப்பட்டதுடன் நையப்புடையப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டான்.

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்காடு பகுதியில் நேற்றிரவு(13) இச்சம்பவம் நடைபெற்றுள்ள நிலையில் அறுத்தெடுக்கப்பட்ட தாலியும் திருடனிடம் இருந்து பொலிசார் கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடையொன்றில் பொருளை கொள்வனவு செய்து விட்டு கடைக்கு பின்னாலிருந்த வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பெண்ணின் கண்களில் தனியாக வந்த திருடன் மிளகாய்த்தூளை வீசி விட்டு தாலியை அறுத்தெடுத்து மதில்கள் மேலால் பாய்ந்து தப்பிக்க முயற்சித்துள்ளான்.
இருப்பினும் தாலியை பறிகொடுத்த பெண் தன்னை சுதாகரித்துக்கொண்டு அயலவர்களை உதவிக்கு அழைத்த நிலையில் ஒன்று கூடிய பொதுமக்கள் குறித்த பிரதேசத்தை சுற்றிவளைத்து தேடுதல் நடத்திய நிலையில் திருடன் கையும் களவுமாக பிடிபட்டான்.
இந்நிலையில் பொதுமக்கள் ஒன்று கூடி திருடனை நையப்புடைந்தெடுத்த சந்தர்ப்பத்தில் அங்கு விரைந்த அக்கரைப்பற்று பொலிசார் திருடனை கைது செய்து விசாரணை மேற்கொண்டதுடன்; திருடனிடம் இருந்த தாலியையும்; மீட்டுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.
இது இவ்வாறிருக்க அன்மைக்காலமாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவு மாத்திரமன்றி திருக்கோவில் பிரதேச செயலலாளர் பிரிவிலும் கொள்ளை அதிகரித்துள்ள நிலையில் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். திருக்கோவில் தம்பிலுவில் பிரதேசத்தில் திருட்டு சம்பவத்தால் பெண் ஒருவரின் உயிர் போகும் நிலையும் அன்மையில் உருவானது.
இதனால் அதிகமாக பெண்கள் நகை அணிவதை தவிர்த்துள்ளதுடன் பலர் தமது நகையினை பாதுகாப்பதற்காக வங்கிகளில் அடமானமும் வைத்து வருகின்றனர்.
இதேநேரம் ஆலையடிவேம்பு பிரதேசத்தின் சமுர்த்தி வங்கி ஒன்றில் திருடுவதற்கான முயற்சியும் அன்மையில் மேற்கொள்ளப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.
ஆகவே இதுபோன்ற கொள்ளை சம்பவங்களை தடுப்பதற்கான முயற்சியை பாதுகாப்பு தரப்பினர் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.