குழந்தையை தாக்கிய தாயின் மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!



அரியாலை பகுதியில் ஒன்பது மாத குழந்தையொன்றை கடுமையாக தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தாய், சிறுவர் சீர்திருத்தப்பளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

 இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் எமது கெப்பிட்டல் செய்திப் பிரிவு வினவிய போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.




அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தாயை பரிசோதனைக்குட்படுத்துவதற்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பொலிஸாரினால் அவர் அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும், குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், குழந்தையை தாக்கிய சம்பவம் தொடர்பில் தாயின் மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கமைய அவர் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இதன்படி, குறித்த தாயின் மருத்துவ அறிக்கை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் பொலிஸாரினால் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த குழந்தையை தாக்குவது தொடர்பான காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் பரவியிருந்த நிலையில், பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்தப் பின்னணியில், குறித்த தாய் இன்றைய தினம் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

24 வயதுடைய குறித்த பெண், சில வருடங்களுக்கு முன்னர் தொழில் நிமித்தம் குவைட் நாட்டுக்கு சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவர் தனது குழந்தையுடன், கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் குவைட்டிலிருந்து நாடு திரும்பியுள்தாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், இவ்வாறான விடயங்கள் குறித்து விசேட கவனஞ் செலுத்துமாறு, சிறுவர் மற்றும் மகளிர் பணியத்திற்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது