நாசாவின் பெர்செவரன்ஸ் ஊர்தி




உலக அளவில்,தொழில்நுட்ப வளர்ச்சி ஒரு புரட்சியை நோக்கிப் படை எடுக்கின்றது.


செவ்வாய் கோளின் பாறைகளில் துரப்பணம் இட்டு மாதிரிகளை சேரிக்க தயாராகிக் கொண்டிருக்கிறது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவின் பெர்செவரன்ஸ் ஊர்தி.


விரல் முனை அளவுக்கு சேகரிக்கப்படும் பாறை மாதிரி ஒரு குழாயில் அடைக்கப்பட்டு புவிக்கு திருப்பி அனுப்பப்படும்.


செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள பொருள்களை அதிநுட்ப ஆய்வகங்களில் ஆராய்வதன் மூலம் செவ்வாயில் எப்போதாவது உயிரினங்கள் வாழ்ந்ததுண்டா என்ற கேள்விக்கு விடை கிடைக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.


செவ்வாயில் உள்ள 45 கிமீ அகலமான ஜெசீரோ பள்ளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் தரையிறங்கியது பெர்செவரன்ஸ்.


இங்கே ஒரு ஏரி இருந்ததாகவும், ஓர் ஆற்றின் மூலம் அந்த ஏரிக்கு நீர் வந்திருக்கலாம் என்பதாகவும் ஒரு பிம்பத்தை அளிக்கின்றன செயற்கைக் கோள் புகைப்படங்கள்.


செவ்வாயில் பறந்த முதல் ஹெலிகாப்டர் - அசத்திய நாசா விஞ்ஞானிகள்

செவ்வாய்க் கோளின் 180 கோடி பிக்சல் புகைப்படங்கள் - சிவப்புக் கோளின் வண்ணங்கள்

ஃபோக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள பாறை. துரப்பணம் இடுவதற்கு இது தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள பாறை. துரப்பணம் இடுவதற்கு இது தேர்வு செய்யப்பட்டுள்ளது.


விஞ்ஞானிகள் சந்தேகிக்கிறபடி செவ்வாயில் ஒரு காலத்தில் நுண்ணுயிரிகள் இருந்திருக்குமானால், அதற்கான தடயங்கள் இந்த ஏரியில் இருப்பதற்கு வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.


ஐந்து மாதங்களுக்கு தரையிறங்கிய இடத்தில் இருந்து தென் திசையில் சுமார் 1 கிமீ தூரம் ஊர்ந்து வந்திருக்கிறது இந்த பெர்செவரன்ஸ் ஊர்தி. நொறுங்கிய பாறைப் பரப்பு என்று விவரிக்கப்படுகிற ஒரு இடத்தில் இது தற்போது நிற்கிறது.


முதல் பாறை மாதிரிகள் எடுக்கத் தயார்.


சேகரிக்கப்படும் வெளுத்த செந்நிறப் 'பாறை மாதிரி', ஜெசீரோ பள்ளத்தின் தரையில் பொதுவாக காணப்படுவதைப் போல இருக்கும் என்று விஞ்ஞானிகள் குழு நம்புகிறது.


இந்த பாறைப் பரப்பு படிவுப் பாறை வகையை சேர்ந்ததா அல்லது எரிமலைக் குழம்பின் மூலம் ஆனதா என்று ஆராயவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எதுவாக இருந்தாலும் அந்த முடிவு சுவாரசியமானது. ஆனால், எரிமலைக் குழம்பால் உருவான பாறையாக இருந்தால் மிகத் துல்லியமாக ஆய்வகத்தில் அதன் காலத்தை கணித்துவிட முடியும் என்கிறார் இந்த ஆய்வுத் திட்டத்தின் முதன்மை விஞ்ஞானி கென் ஃபார்லே.


அப்படி நடந்தால், செவ்வாயில் நாம் பார்க்கிற பல பொருள்களின் காலத்தை கணித்துவிடமுடியும் என்கிறார் அவர். தான் நிற்கிற பாறைப் பரப்பின் மேற்புறத்தை முதலில் சுரண்டி தூசியை அகற்றிவிட்டு பிறகுதான் அந்த இடத்தை தனது ஆற்றல் மிக்க கருவிகளால் ஆராயும்.


பெர்செவரன்ஸ் பாறை ஆய்வு செய்யவுள்ள இடம்.


அந்தப் பாறையின் வேதித் தன்மை, உலோகவியல் கூறுகள், அமைப்பு ஆகியவற்றை இந்தக் கருவிகளால் ஆராய முடியும்.


இறுதியாக ஆகஸ்ட் மாதம், இங்கே துரப்பணம் போட்டு உட்பகுதியில் உள்ள மாதிரியை இதனால் எடுக்க முடியும். மாதிரிகளைத் திரட்டி சுமார் 40 சிறு குழாய்களில் அடைக்கும்.


பிற்காலத்தில் நாசா, ஐரோப்பிய விண்வெளி முகமைகள் மேற்கொள்கிற பயணங்களின்போது இந்த குழாய்கள் திரட்டப்பட்டு அவை பூமிக்கு கொண்டு வரப்படும்.


உயிர்கள் வாழ்ந்ததற்கான தடயங்களை பழங்காலப் பாறைகளில் தேடும் ஆராய்ச்சிக்காக எதிர்பார்க்கப்படும் பாறைகள் இவையேதான் என்கிறார் ஃபார்லே.




பெர்செவரன்ஸ் ஊர்தி செயல்படும் விதம் நாசாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. குறிப்பாக அது ஊர்ந்து செல்லும் விதம். இந்த ஊர்தி மிக அதிக அளவில் தாமே முடிவு செய்யும் நிலையை அடைந்துள்ளது.



ஆனால், கடந்த கால ஊர்திகளுக்கு அதிக அளவில் புவியில் இருந்து வழிகாட்டுதல்கள் தரவேண்டியிருந்தது. வழியில் தடைகள் இருந்தால் இந்த ஊர்தி தானாகவே அதைக் கண்டறிந்து அவற்றைத் தவிர்த்துவிட்டு ஊர்ந்து செல்கிறது.


இந்த ஊர்தியோடு கொண்டு செல்லப்பட்ட இன்ஜினியுட்டி என்ற மினி ஹெலிகாப்டர் திரட்டித் தந்த தரவுகள் உதவியோடு செயல்படுகிறது இந்த ரோபோட்டிக் ஊர்தி.