'கிசாலினியின் மரணத்தை இன ரீதியான பிரச்சனையாக மாற்றிவிடக்கூடாது'


 


வி.சுகிர்தகுமார் 0777113659 

  மலையக சிறுமி கிசாலினியின்; மரணத்திற்கும் அதனோடு தொடர்புடைய ஏனைய உரிமை மீறல் குற்றங்களுக்கும் தகுந்த வகையில் விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளை தண்டிப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அம்பாரை மாவட்ட பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டனர்.
மேலும் குறித்த விசாரணைக்கான சட்டத்தினை அமுல்படுத்தும் தரப்பினர் பக்கச்சார்பின்றியும் எந்த ஒரு பின்புல அழுத்தங்களையும் பொருட்படுத்தாது நீதியானதும் நேர்மையானதுமாக மேற்கொள்ள வேண்டும் எனவும் இவற்றை இன ரீதியான பிரச்சனையாக மாற்றிவிடக்கூடாது, என்பதுடன் குறித்த சிறுமியான கிசாலினியைப் போன்ற சிறுவர்களுக்கும் இவ்வாறு  நடைபெறக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்தனர்.
அக்கரைப்பற்றில் உள்ள பாதிப்புற்ற பெண்கள் அரங்க ஒன்றுகூடல் மண்டபத்தில்  இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
இச்சந்திப்பில் பாதிப்புற்ற பெண்கள் அரங்க தலைவி தர்மராஜா சிவபாக்கியம் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் செய்யது முகம்மது சித்தி நிலோபா அரங்கத்தின் உறுப்பினர் பொன்னையா யோகேஸ்வரி அரங்கத்தின் இளைஞர் அமைப்பு உறுப்பினர் கலந்தர் லெவ்பை முஹம்மது நஜாத் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்ததுடன் உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர்.
ஊடக சந்திப்பின் நோக்கம் பற்றி அரங்க திட்ட இணைப்பாளர் சுமந்தி தங்கராசா விளக்கினார். பின்னர் ஊடகங்களுக்கு கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டன.
எமது நாட்டில் வயது 16 வரை பிள்ளைகளுக்கான கல்வி கட்டாயமாக ஆக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சிறுமியினது கல்வி இடைவிலகல் அவதானிக்கப்படாமல் இருந்துள்ளது. இதன் மூலம்; குறித்த உத்தியோகத்தர்கள் தமது கடமையை சரிவர செய்ய தவறியுள்ளனர் என்பது தெளிவாக புலப்படுகின்றது.

இலங்கையில் 1956ம் ஆண்டின் 47ம் இலக்க பெண்களையும் இளம் ஆட்களையும் பிள்ளைகளையும் தொழிலுக்கு அமர்த்துதல் சட்டத்திற்கு அமைவாக பொது நன்மைக்காக 16 வயதுக்கு மேற்பட்டதும் 18 வயதுக்கு இடைப்பட்டதுமான ஆட்களை தொழிலுக்கு அமர்த்தலாம். ஆனால் அது தொடர்பாக தொழில் ஆணையாளருக்கு அறிவித்து அவசர நிலை தொடர்பாக அறிவித்த பின்னரே அதனை செய்ய முடியும். இதே சட்டத்தில் பாடசாலைக்கு செல்வதை தடுப்பதாக அல்லது உடலுக்கு பங்கம் விளைவிக்கும் தொழிலில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்த முடியாது என சட்டம் தெளிவாக கூறுகின்றது. இந்நிலையில் இச்சிறுமி வயது குறைந்த நிலையில் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதுடன் அவரது கல்வி நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவரது பிரேத பரிசோதணை அறிக்கையின்படி குறித்த சிறுமி தொடர்ச்சியான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. எமது தண்டனைச் சட்ட கோவையின் பிரகாரம் பாலியல் துஷ்பிரயோகம் என்பது மிகவும் பாரிய குற்றமாக காணப்படுவதுடன் இது வேலைத்தளங்களில் இடம்பெறுவது கண்டிக்கப்பட்டும் வருகின்றது. மேலும் அவரது பிரேத பரிசோதணை அறிக்கையின்படி குறித்த சிறுமி தொடர்ச்சியான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. எமது தண்டனைச் சட்ட கோவையின் பிரகாரம் பாலியல் துஷ்பிரயோகம் என்பது மிகவும் பாரிய குற்றமாக காணப்படுவதுடன் இது வேலைத்தளங்களில் இடம்பெறுவது கண்டிக்கப்பட்டும் வருகின்றது.


இங்கு சிறுமியை வேலைக்கு அமர்த்தியது, கல்விக்கு பங்கம் விளைவித்தமை மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை போன்ற பல்வேறுபட்ட பாரதூரமான குற்றங்களுடன் பின்னிப் பிணைந்ததாக காணப்படுகின்றது. இதனடிப்படையில் குறித்த சிறுமியின் மரணத்திற்கும் அதனோடு தொடர்புடைய ஏனைய உரிமை மீறல் குற்றங்களுக்கும் தகுந்த வகையில் விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளை தண்டிப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறித்த விசாரணைகளை சட்டத்தினை அமுல்படுத்தும் தரப்பினர் பக்கச்சார்பின்றியும் எந்த ஒரு பின்புல அழுத்தங்களையும் பொருட்படுத்தாது நடத்தப்பட வேண்டும். இதன் மூலம் கிடைக்கும் நீதியானது பல கிஷாலினிகளின் துஷ்பிரயோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற ஒன்றாக அமைய வேண்டும்.


தற்போதைய கொரோனா சூழலில் மக்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தள்ளப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து காணப்படும் இந்த சூழலில் குடும்ப மற்றும் பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையினை நாம் காண முடிகின்றது. இந்த மாதத்தில் கிஷாலினியின் வழக்கு உள்ளடங்கலாக மொத்தம் 6 சிறுவர்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்பான வழக்குகள் பதிவாகியுள்ளன.

இவை அனைத்தும் நம் நாட்டில் இம்மாதத்தில் இடம்பெற்ற கொடுமைகள். சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் பெண்கள் சிறுவர்கள் நலன் பொலிஸ் பிரிவின் கட்டமைப்பும் சிறுவர்கள் தொடர்பான வன்முறை முறைப்பாடுகள் தொடர்பான பாரபட்சம் காட்டாமல் நியாயம் கிடைப்பதற்கு கட்டாயம் நீதியுடன் செயற்பட வேண்டும். காரணம் பயணக்கட்டுப்பாடு அமுலில் இருந்த காலப்பகுதியில் சிறுவர் தொடர்பான அதி கூடிய வன்முறை இடம்பெற்ற போதும் மேற்குறிப்பிட்ட கட்டமைப்புக்கள் எதுவும் சீராகவும் வினைத்திறனுள்ள முறையிலும் தங்களது கடமைகளை நிறைவேற்றவில்லை.

பெண்ணுரிமை செயற்பாட்டாளர்களாக நாங்கள் பல அணுகுமுறைகளை நாடியும் இந்தக் கட்டமைப்புக்கள் சீராக இயங்கவில்லை. அதனால் சிறுவர்கள் தொடர்பான பாரிய வன்முறைகள் தொடர்ச்சியான இடம்பெற இந்த கட்டமைப்புகளது வினைத்திறனற்ற செயற்பாடுகள் ஒரு வகையில் வழிவகுத்துள்ளன. இந்த நிகழ்வின் பின்னரேனும் இந்தக் கட்டமைப்புக்கள் அவர்களது கடமைகளை சரியாக வினைத்திறனுள்ள வழியில் பாதிக்கபட்டவருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கக்கூடிய வகையில் செய்ய வேண்டும். மேலும் அதன் துறை சார்ந்த அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் நீதித்துறை சார்ந்த பல மாற்றங்களை கதைத்து கொண்டிருக்கும் நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்களும் சிறுவர் உரிமைகள் தொடர்பான சட்டங்கள் தொடர்பான மாற்றங்கள் தொடர்பாகவும் கருத்திற் கொள்ள வேண்டும்.

  அதற்கான செயற்திறன் மிக்க பொறிமுறைகளை உருவாக்கி, நீதித்துறை சார்ந்த கட்டமைப்பில் சிறுவர்கள் சார்ந்து கையாளப்படும் வழக்குகளை காலதாமதமில்லாமல் விரைவாக விசாரணைகளை மேற்கொண்டு தண்டனைகளை வழங்கக் கூடிய செயல்முறைகளைக் கொண்டு வர வேண்டும். துரிதப்படுத்தப்பட்ட செயன்முறையை நடைமுறைப்படுத்தி விரைவாக நீதியைப் பெற்றுக் கொள்வதற்கு உதவ வேண்டும்.

 இவ்வாறு செய்தால் மாத்திரமே சிறுவர் துஸ்பிரயோகத்தையும் அவர்களுக்கெதிரான வன்முறைகளையும் இலங்கையில் குறைக்க முடியும். அத்துடன் பாதிக்கப்பட்ட குடும்பத்தைத் தான் சமூக வலையத் தளங்கள் ஊடாக மேலும்  மேலும் பாதிப்புக்குள்ளாக்கும் நிலை காணப்படுகின்றது. பாதிப்புள்ளாக்கிய நபர்களுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது என்பது தாமதமான விடயமாக உள்ளது. என்பதனைத் தெரிவிப்பதுடன் இந்த சம்பவம் சிறுவர்களது உரிமை மீறல் என்பதனை மனதில் நிறுத்தி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவற்றை இன ரீதியான பிரச்சனையாக மாற்றிவிடக்கூடாது, என்பதுடன் குறித்த சிறுமியான கிசாலினியைப் போன்ற சிறுவர்களுக்கு  நடைபெறக்கூடாது. என்பதனை எமது நிறுவனம் கேட்டுக்கொள்வதுடன் இதனை வன்மையாகக் கண்டிக்கும் அதேநேரம்; இச் சம்பவத்துக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் கேட்டுக் கொள்கின்றோம் என்றனர்