விழிப்புணர்வு நிகழ்வு,சேதனப்பசளை மற்றும் இயற்கை பீடை நாசினி பாவனை


 


சுகிர்தகுமார் 0777113659 


  சேதனப்பசளை மற்றும் இயற்கை பீடை நாசினி பாவனை மூலம் எதிர்கால சந்ததியை நோயற்ற சமூகமாக மாற்றும் ஜனாதிபதியின் சௌபாக்கிய நிகழ்ச்சித்திட்ட விழிப்புணர்வு நிகழ்வு கிழக்கு மாகாண விவசாயத்திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்;டு வருகின்றது.

இதற்கமைவாக இன்று அம்பாரை மாவட்டத்திலும் அதுபோல் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலும் ஒலிபெருக்கி மூலமும் துண்டுப்பிரசுரங்கள் மூலமும் விழிப்பூட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அக்கரைப்பற்று கிழக்கு விவசாயப் போதனாசிரியர் எம்.எச்.எம்.சஜாத் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வில் மாகாண விவசாயத்திணைக்களத்தின் அக்கரைப்பற்று வலய உதவி விவசாயப்பணிப்பாளர் திருமதி ஏ.ரவீந்திரன் மற்றும் தலைமைப்பீட விவசாயப்போதனாசிரியர் ஏ.எல்.றபீக், பாடவிதான உத்தியோகத்தர் எம்.கோகுல்ராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கு அமைவாக எதிர்வரும் போகத்தில் இருந்து இரசாயனப்பசளை மற்றும் கிருமி நாசினிகள் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே எதிர்காலத்தில் விவசாயிகள் சேதனப்பசளை மற்றும் இயற்கை பீடை நாசினிகளை தயாரிக்கவும் பயன்படுத்தவும் தங்களை தயார்படுத்திக் கொள்ளுதல் அவசியமானதாகும்.

இதன் மூலம் தொற்றா நோய் உள்ளிட்ட பல நோய்களில் இருந்து நாம் விடுதலை பெறமுடியும் என்பதோடு ஆரோக்கியமான எதிர்கால சமூகத்தை உருவாக்க முடியும் எனவும் தெரிந்து கொள்வதுடன் இதற்கான சகல ஒத்துழைப்பினையும் பொதுமக்களும் விவசாயிகளும் வழங்க வேண்டும்.

இதனை மையமாக கொண்டே குறித்த ஒலிபெருக்கி மூலமான விழிப்புணர்வு நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டதுடன் அறிவுறுத்தல் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

அத்தோடு தேவையேற்படும் சந்தர்ப்பத்தில் விவசாய திணைக்கள் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயிற்சி வகுப்புக்கள் மற்றும் செய்கை முறைகள் போன்ற மேலதிக தகவல்களை பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இறுதியாக மாகாண விவசாயத்திணைக்களத்தின் அக்கரைப்பற்று வலய உதவி விவசாயப்பணிப்பாளர் திருமதி ஏ.ரவீந்திரனினால் திட்டம் தொடர்பான கருத்துக்களும் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டது.