லொறிகளில் களவாடிய கும்பல் ஒன்று நோர்வூட்டில் சிக்கியது!


 


(க.கிஷாந்தன்)

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்ஜோன்டிலரி பகுதியில் நீண்ட காலமாக உணவு பொருட்கள் மற்றும் அத்தியவசிய பொருட்கள் கொண்டு சென்ற லொறிகளில் களவாடிய கும்பல் ஒன்றினை நோர்வூட் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து நேற்று (18) அதிகாலை களவாடிய ஒரு தொகை மரக்கறி மூட்டைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இதனுடன் தொடர்புடைய மூன்று பேர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.

பலாங்கொடை மற்றும் எம்பிலிபிட்டிய பகுதியிலிருந்து பொகவந்தலாவ, நோர்வூட், மஸ்கெலியா, அட்டன், நுவரெலியா மாவட்டத்தின் ஏனைய பல நகரங்களில் இருந்து மரக்கறிகள் மற்றும் பழங்கள் தேங்காய் உள்ளிட்ட பொருட்களை ஏற்றிச்செல்லும் லொறிகளிலேயே இவ்வாறு திருட்டு செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

பொகவந்தலாவ நோர்வூட் பகுதியில் வீதி அபிவிருத்தி பணிகள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருவதனால் இந்த வீதியில் அதிகாலை வேளையில் செல்லும் லொறிகள் மெதுவாக செல்வதாகவும் குறித்த கும்பலில் ஒருவர் லொறிகளில் ஏறி கையிற்றின் மூலம் வீதியில் மரக்கறி மூட்டைகளை இறக்குவதாகவும் அதனை தொடர்ந்து பின்னால் வரும் முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்று வீட்டில் வைத்து ஒவ்வொரு மூட்டைகளாக கடைகளுக்கு விற்பனை செய்வதாகவும் தெரிவியவந்துள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் ஒரு தடவைக்கு சுமார் 25000 தொடக்கம் 50000 வரையான உணவு பொருட்களை களவாடி விற்பனை செய்துள்ளதாகவும் இதனை நீண்ட காலமாக செய்து வந்துள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து புடலங்காய், வெண்டிக்காய், தக்காளி, கீரைவகைகள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த சந்தேக நபர்கள் மற்றும் மீட்கப்பட்ட மரக்கறிகள் இன்று (19) அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரேமலால் தெரிவித்தார்.