பாகிஸ்தான் அணு ஆயுத திட்டத்தின் தந்தை என்று கூறப்பட்ட அப்துல் கதீர் கான், மறைவு



 பாகிஸ்தான் அணு ஆயுத திட்டத்தின் தந்தை என்று கூறப்பட்ட அப்துல் கதீர் கான் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இஸ்லாமாபாத்தில் காலமானார். அவருக்கு வயது 85.

அணு ஆயுதங்கள் உடைய முதல் இஸ்லாமிய நாடாக பாகிஸ்தானை உருவாக்கியதில் பெரும்பங்கு உடைய அப்துல் கதீர் கான் பாகிஸ்தானில் ஒரு தேசிய நாயகனாகவே பார்க்கப்படுகிறார்.


ஆனால், தெற்காசியப் பிராந்தியத்தில் அணு ஆயுதப் போட்டிக்கு வித்திட்டவர்களில் ஒருவராகவும் இவர் கருதப்படுகிறார்.


இந்தியாவுடன் போட்டியிட பாகிஸ்தானுக்கு கானின் பங்களிப்பு

இந்தியாவில் உள்ள மத்திய பிரதேச தலைநகர் போபாலில் 1935ஆம் ஆண்டு ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர் அப்துல் கதீர் கான்.


இந்தியா -பாகிஸ்தான் பிரிவினை நடந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 1952ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு இவர் குடிபெயர்ந்தார்.


1965 போரில் சறுக்கிய பாகிஸ்தான், இந்தியா சுற்றி வளைத்தது எப்படி?

'போர் மூண்டால் மூளட்டும்': இந்திரா காந்தியின் வரலாற்றுப்பூர்வ நடவடிக்கை

கராச்சி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற கான் மேற்கு ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில் உயர்கல்வி கற்றார். 1970களின் முற்பாதியில் ஐரோப்பாவில் பணியாற்றிய இவர், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஜுல்ஃபிகர் அலி பூட்டோ அரசு முன்னெடுத்த அணு ஆயுத திட்டத்தில் பங்கேற்பதற்காக 1976ஆம் ஆண்டு பாகிஸ்தான் திரும்பினார்.


இந்தியா 1974ஆம் ஆண்டு அணு ஆயுத சோதனை நடத்திய பின்பு அணுசக்தி வல்லரசாகும் பாகிஸ்தானின் முயற்சிகளில் அப்துல் கதீர் கான் தம்மை இணைத்துக் கொண்டார் என்று பாகிஸ்தான் அரசு ஊடகமான ரேடியோ பாகிஸ்தான் தெரிவிக்கிறது.



இந்திரா காந்தி பிரதமராக இருந்த பொழுது 1974ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி ''ஆப்பரேஷன் ஸ்மைலிங் புத்தா'' எனும் பெயரில் ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் தனது முதல் வெற்றிகரமான அணு ஆயுத சோதனையை இந்தியா நடத்தியது


1976ஆம் ஆண்டு கான் ரிசர்ச் லேபரட்டரீஸ் எனும் ஆய்வகத்தை நிறுவிய அப்துல் கதீர் கான் அதன் தலைவராகவும் இயக்குநராகவும் பல்லாண்டு காலம் பணியாற்றினார் என்றும் ரேடியோ பாகிஸ்தான் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


1998ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்தியா பொக்ரானில் இரண்டாவது அணு ஆயுத சோதனை நடத்திய சில நாட்களிலேயே பாகிஸ்தானும் வெற்றிகரமான அணு ஆயுத சோதனையை நடத்திக் காட்டியதில் அப்துல் கதீர் கான் முக்கியப் பங்காற்றினார்.



நிலத்துக்கு அடியில் அப்போது பாகிஸ்தான் ஐந்து அணு ஆயுதங்களை வெடிக்கச் செய்து சோதித்தது.


வீட்டுச் சிறையில் வைக்கப்பட்ட தேசிய நாயகன்

இந்தியாவுடன் போட்டியிடும் அளவுக்கு பாகிஸ்தானின் அணுசக்தித் திறனை அதிகரிப்பதற்காக அப்துல் கதீர் கான் பாராட்டப்பட்டார். அதே நேரம் இரான், லிபியா, வட கொரியா ஆகிய நாடுகளுக்கு பாகிஸ்தானின் சட்டங்களை மீறி அணு ஆயுதத் தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொண்டதற்காக சர்வதேச அளவில் கடும் விமர்சனத்துக்கும் உள்ளானார்.


மார்ச் 2001ஆம் ஆண்டு அப்போதைய பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷரஃப்புக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆலோசகராக நியமிக்கப்பட்டார் கான். வெளிநாடுகளுக்கு அணு ஆயுத தொழில்நுட்பத்தை பகிர்ந்துகொண்டது தொடர்பான குற்றச்சாட்டில் விசாரணைக்கு உள்ளான சமயத்தில் ஜனவரி 2004இல் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.


மூன்று நாடுகளுக்கும் அணு ஆயுத தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொண்டதில் தமக்கு பங்கு இருப்பதாக 2004ஆம் ஆண்டு இவர் ஒப்புக் கொண்ட பின்பு இஸ்லாமாபாத்தில் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.


பர்வேஸ் முஷரஃப் உடன் அப்துல் கதீர் கான் (இடது)

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

பர்வேஸ் முஷரஃப் உடன் அப்துல் கதீர் கான் (இடது)


2009ஆம் ஆண்டு இவரது வீட்டுக் காவல் நீதிமன்றம் ஒன்றால் ரத்து செய்யப்பட்டாலும் அவர் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரால் கடுமையான கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டார்.


கான் எப்போதெல்லாம் வீட்டை விட்டு வெளியே சென்றாரோ அப்போதெல்லாம் அவருடன் கண்காணிப்பு அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

2006ஆம் ஆண்டு புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்புக்கு உண்டான கான், சிகிச்சைக்கு பிறகு மீண்டார் என்று பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.