பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான பிறைசூடன் காலமானார்



தமிழ் சினிமாவில் 1500க்கும் அதிகமான பாடல்களையும், ஐயாயிரத்திற்கும் அதிகமான பக்தி பாடல்களையும் எழுதிய பாடலாசிரியரும் பிரபல கவிஞருமான பிறைசூடன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 65.

1980ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனால் ‘சிறை’ திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தப்பட்டு 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1500க்கும் அதிகமான பாடல்களை எழுதியவர் பிறைசூடன்.

பக்தி பாடல்கள் எழுதுவதில் ஆர்வம் கொண்ட பிறைசூடன் ஐயாயிரத்திற்கும் அதிகமான பக்தி பாடல்களை எழுதி ஆன்மீக பக்தர்கள் இடையே அதிகம் புகழ் பெற்றவராக திகழ்ந்தார். ‘என் ராசாவின் மனசிலே’ திரைப்படத்தில் இடம் பிடித்த ‘சோலப் பசுங்கிளியே...’ என்ற பாடலுக்காக தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை வென்றார் பிறைசூடன்.

விஜயகாந்தின் நூறாவது திரைப்படமான ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஆட்டமா தேரோட்டமா’ பாடல் வர்த்தக ரீதியில் புகழ்பெற்ற பாடலாசிரியராக பிறைசூடனை அடையாளம் காட்டியது. கோபுர வாசலிலே திரைப்படத்தில் இடம் பிடித்த ‘காதல் கவிதைகள் படித்திடும் நேரம்’, இதயம் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘இதயமே இதயமே’ உள்ளிட்ட பாடல்கள் காலத்தால் அழிக்க முடியாத பாடல்களாய் இன்னும் தமிழ் ரசிகர்கள் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

ஆன்மீக சொற்பொழிவு கூட்டங்களிலும், இலக்கியக் கூட்டங்களிலும் தொடர்ந்து பேசி வந்த பிறைசூடன் மதிய உணவிற்கு பிறகு குடும்பத்தினருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த நிலையில் திடீரென சரிந்து விழுந்தது மரணமடைந்தது அவரது குடும்பத்தினரையும் திரை ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.