பங்குனி உத்தரத்திருவிழா



 


(காரைதீவு சகா)


வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன்  ஆலய வருடாந்த பங்குனி உத்தரத்திருவிழா கடந்த இருவருடங்களின்பின்பு மிகவும் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.

ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் திருவிழாப்பூஜைகளை சிறப்பாக நடாத்த தினமும் நற்சிந்தனை சொற்பொழிவு உள்வீதி வெளிவீதி தேருர்வலம் என்று பல சிறப்புகளுடன் திருவிழா இடம்பெற்றுவருகிறது.

மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி தக்ஷஜானந்தஜீ மஹராஜ் நேற்றுமுன்தினம் சொற்பொழிவாற்றினார். ஆலயநிருவாகம் அவருக்கு பொன்னாடைபோர்த்துக் கௌரவித்தது.
ஆண்களும் பெண்களும் வடம்பிடித்து தேர் இழுத்து வெளிவீதியுலா வருவது கண்கொள்ளாக்காட்சியாக அமைகிறது.

தொடர்ந்து ஒன்பது நாட்கள் திருவிழா நடைபெறுவதுடன் தினமும் காலை 10.00 மணிக்கு கும்ப பூஜையும் 12.00 மணிக்கு விசேட பூஜையும் மாலை 6.00 மணிக்கு இரவு பூஜையுடன் நற்சிந்தனையும் வசந்த மண்டபப்பூஜையினைத் தொடர்ந்து அம்பாள் உள்வீதி வெளி வீதி உலாவருதல் இடம்பெற்றுவருகிறது.

நேற்று 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்திலிருந்து பாற்குட பவனி இடம்பெற்றது. எதிர்வரும்  16 ஆம் திகதி அம்பாள் விநாயகர் முருகப் பெருமான் சகிதம் முத்துச் சப்பரத்தில் தேரோடும் வீதி வழியாக பவனி வருதலும் இடம் பெற்று 18 ஆம் திகதி காலை நடைபெறும் சமுத்திரத் தீர்த்தோற்சவத்துடனும் 19ஆம் திகதி மாலை நடைபெறும் பைரவர் பூஜையுடன் உற்சவம் இனிதே நிறைவுபெறவுள்ளது