அக்கரைப்பற்றில், தீ அனர்த்த செயன்முறை



 


வி.சுகிர்தகுமார் 0777113659  



  தீ அனர்த்தத்தின் போது பொதுமக்கள் செயற்படவேண்டிய விதம் தொடர்பில் விளக்கமளிக்கும் செய்முறை பயிற்சி இன்று அக்கரைப்பற்று பஸ் தரிப்பிட நிலையத்தில் இடம்பெற்றது.
அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் அக்கரைப்பற்று மாநகரசபை இராணுவத்தினர், பொலிசார், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை  உள்ளிட்ட  நிறுவனங்கள் மற்றும் அரச திணைக்களங்கள் ஏற்பாட்டில் இடம்பெற்ற விழிப்புணர்வு செயற்பாட்டில் அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் எம்.ஏ.எம்.றியாஸ் தலைமையில் இடம்பெற்ற இவ்விழிப்புணர்வு செயற்பாட்டில் அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் அதாவுல்லா அகமட் சகி மற்றும் மாநகர சபை ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதன்போது பஸ் தரிப்பிடத்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் அழைக்கப்பட்டு தீயை கட்டுப்பாட்டினுள் கொண்டு வருவது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.
பின்னர் சம்பவத்தில் காயமுற்றவர்களுக்கு முதலுதவி பயிற்சி அளிக்கும் செயற்பாடுகளும் செயற்பாட்டு ரீதியாக காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து காயமுற்றவர்களை வைத்தியசாலைக்கு நோய்காவு வண்டி மூலம் கொண்டு செல்லும் முறைகள் தொடர்பிலும் காண்பிக்கப்பட்டது.
இதேநேரம் இன்று காலை ஆசிரியர்களுக்கு விழிப்பூட்டும் செயலமர்வும் இடம்பெற்றதாகவும் தீ அனர்த்தத்தின் போது பொதுமக்கள் செயற்படவேண்டிய விதம் தொடர்பில் விளக்கமளிக்கும் செய்முறை பயிற்சியும் ஆசிரியர்களுக்கும் பொதுமக்களுக்கும் காண்பிக்கப்பட்டதாகவும் இதன் மூலம் பொதுமக்களும் தீ அனர்த்தம் ஏற்படும் நடந்து கொள்ள வேண்டிய முறை தொடர்பில் அறிந்து கொண்டுள்ளதாகவும்  அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் எம்.ஏ.எம்.றியாஸ் தெரிவித்தார்.