இலங்கை- இந்திய நல்லுறவை விரிவுபடுத்தும் முயற்சிகளில் விஜயின் பங்களிப்பு அவசியமானதாக இருக்கும்




 நூருல் ஹுதா உமர்


தமிழக அரசியல் மாற்றப் பயணத்தில் புதிய நம்பிக்கையாக திகழும் நடிகரும், தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் அவர்களுக்கு, இலங்கையின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் தனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் மறுமலர்ச்சி சின்னங்களாக திகழ்ந்த அறிஞர் அண்ணாதுரை மற்றும் எம்.ஜீ.ஆர் ஆகியோர், பெரியாரின் கொள்கைகளை முன்னிறுத்தி சமூக நீதி மற்றும் மக்கள் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் மாற்றத்தை உருவாக்கியதை நினைவுகூர்ந்தார்.

அதேபோன்று, இன்றைய தலைமுறையின் நம்பிக்கையாக விளங்கும் விஜய் அவர்கள் மக்கள் ஆதரவைப் பெற்று அதே மாற்றப் பாதையில் முன்னேறி வருவது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளையும் மாற்றத்திற்கான ஆவலையும் அரசியல் செயற்பாடுகள் மூலம் வெளிப்படுத்தி, புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கும் முயற்சி பாராட்டத்தக்கது என்றும் தெரிவித்தார்.

மேலும், இம்மாற்றப் பயணம் இன, மத, சாதி மற்றும் பிரதேச வேறுபாடுகளைத் தாண்டி மக்களை ஒன்றிணைக்கும் புதிய சமூக அரசியல் திசையை உருவாக்கும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டார். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செயற்படும் Gen-Z தலைமுறையினரிடையே விஜய்க்கான ஆதரவு அதிகரித்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, விஜயின் அரசியல் வருகைக்குப் பின்னர் இலங்கையிலும் அனைத்து இன மக்களிடையே அவருக்கு ஆதரவு அதிகரித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் காணப்படுவதாகவும் ஹரீஸ் தெரிவித்தார்.

இலங்கை மற்றும் தமிழகத்துக்கிடையிலான வரலாற்று, பண்பாட்டு மற்றும் உணர்வுப் பிணைப்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், எதிர்காலத்தில் விஜய் தலைமையிலான ஆட்சி முக்கிய பங்காற்றும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார். இரு பகுதிகளுக்கிடையிலான நல்லுறவை விரிவுபடுத்தும் முயற்சிகளில் விஜயின் பங்களிப்பு அவசியமானதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முதலமைச்சராக பொறுப்பேற்று தமிழகத்தை இந்தியாவின் முன்னணி மாநிலமாக உயர்த்தும் வகையில் செயல்பட வேண்டும் என வாழ்த்திய ஹரீஸ், மக்களின் நம்பிக்கையை நனவாக்கும் அரசியல் பயணத்தில் விஜய்க்கு தொடர்ந்த வெற்றிகள் கிடைக்க இறைவனை வேண்டுகின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.