தெதுறு ஓயா, லுணுகம்வெஹேர, இராஜாங்கனை நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு



சீரற்ற வானிலை காரணமாக தெதுறு ஓயா, லுணுகம்வெஹேர மற்றும் இராஜாங்கனை ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளை இன்று (09) காலை திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. 


தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் தலா 3 அடி வீதமும் விநாடிக்கு 8,400 கன அடிக்கும் திறக்கப்பட்டுள்ளது.


அதேபோல், லுணுகம்வெஹேர நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. இதில் 2 கதவுகள் தலா 4 அடி வீதமும், ஏனைய 4 கதவுகள் தலா 8 அடி வீதமும் விநாடிக்கு 2,915 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், கிரிந்தி ஓயாவைப் பயன்படுத்துவோர் அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 


இதேவேளை, ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. அவற்றில் 4 கதவுகள் தலா 2 அடி வீதமும், ஏனைய 2 கதவுகள் தலா 3 அடி வீதமும் விநாடிக்கு 4,542 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக மேலும் தெரிவித்துள்ளது.