மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (03) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
2023ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர், மொஹமட் முயிசு இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் வருகை தரும் மாலைதீவு ஜனாதிபதி, எதிர்வரும் 06ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்.
இந்த விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் அவர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் 06 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்படவுள்ளன.
மாலைதீவு ஜனாதிபதியின் இந்த வருகையை முன்னிட்டு இன்று (03) முதல் வரும் 06ஆம் திகதி வரை கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை, ரஷ்ய கூட்டமைப்பின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ தலைமையிலான பிரதிநிதிகள் குழுவொன்றும் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (03) நாட்டை வந்தடையவுள்ளது.
இந்த விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான சுகாதாரத் துறை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ரஷ்ய சுகாதார அமைச்சர், இலங்கையின் சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவுடன் கலந்துரையாடல்களை நடத்துவார் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலதிகமாக, ரஷ்ய சுகாதார அமைச்சர் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தையும் சந்திக்கவுள்ளதுடன், நாளை கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆகியவற்றிற்கும் விஜயம் செய்யவுள்ளார்.
இன்று வருகை தரும் ரஷ்ய சுகாதார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் எதிர்வரும் 05ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment
Post a Comment