நூருல் ஹுதா உமர்
நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் போதைப்பொருள் அரக்கனுக்கு எதிராக, விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் "சமுர்த்தி போதைப்பொருள் ஒழிப்பு வாரமும் கொடி விற்பனையும்" (09) செவ்வாய்க்கிழமை சாய்ந்தமருதில் நடைபெற்றது.
சாய்ந்தமருது சமுர்த்தி வங்கிச் சங்க கூட்ட மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வானது, சாய்ந்தமருது - 14 ஆம் பிரிவு சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளின் ஏற்பாட்டில் நடைபெற்றது. சாய்ந்தமருது - 14 ஆம் பிரிவின் பதில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரும் கருத்திட்ட உதவியாளருமான என்.எம்.நௌஷாட் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இதில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கல்முனை நிறைவேற்றுப் பொறியியலாளரும் பதில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளருமான பொறியியலாளர் எம்.எம்.எம். முனாஸ், சட்டத்தரணி எம். அஸாம், தொழிலதிபர் ஏ.எல்.ஆப்தீன், சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் ஏ. சீ. ஏ. நஜீம், சமுர்த்தி முகாமையாளர்களான றியாத் ஏ. மஜீத், எஸ்.றிபாயா, ஏ.எம். இக்றாம், சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல். ஜஃபர், அபிவிருத்தி உத்தியோகத்தர் (CBO) ஏ.எப். றிகாஸா ஷர்பீன், ஓய்வுபெற்ற சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம். அதல் ஹூதா ஆகியோரின் பங்குபற்றலுடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் கருத்திட்ட உதவியாளர் என்.எம்.நௌஷாட் மற்றும் சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் ஏ. சீ. ஏ. நஜீம் ஆகியோர், போதைக்கு எதிரான விழிப்புணர்வை ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொண்டு சேர்க்க வேண்டியதன் கட்டாயத்தை வலியுறுத்தி ஆழமான கருத்துரைகளை வழங்கினர்.
நிகழ்வின் அங்கமாக, வருகை தந்த அதிதிகளுக்கு "சமுர்த்தி போதைப்பொருள் ஒழிப்பு கொடி" அணிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அதிதிகள் அனைவரும் தங்களது தாராளமான நிதிப் பங்களிப்பினை வழங்கினர்.
இந்நிகழ்வின் சிறப்பம்சமாக, கலந்து கொண்ட அதிதிகள் அனைவருக்கும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வைச் சித்தரிக்கும் பிரத்தியேக விழிப்புணர்வு பெச் அணிவிக்கப்பட்டது. மேலும், நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய கருத்திட்ட உதவியாளர் என்.எம்.நௌஷாட் அவர்களின் தனித்துவமான சிந்தனையில் உருவான ஒரு சுவாரஸ்யமான நிகழ்வும் அரங்கேறியது.
கூட்டத்திற்கு முதலாவதாக வருகை தந்த சமுர்த்தி சங்க உறுப்பினர் ஒருவரை ஊக்குவிக்கும் வகையில், அதிதிகளினால் அவருக்கு விஷேட பரிசு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். நேர முகாமைத்துவத்தையும், சமுதாயப் பொறுப்பையும் பாராட்டும் இந்த வினோத முயற்சி அங்கிருந்த அனைவரின் பலத்த பாராட்டுகளையும் பெற்றது. போதையற்ற ஆரோக்கியமான சமுதாயத்தைக் கட்டியெழுப்ப சபதமேற்று இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது


Post a Comment
Post a Comment