கண்ணகி கிராம மக்களினால் மகஜர் கையளிப்பு,



ஆலையடிவேம்பு நிருபர்


வி.சுகிர்தகுமார்      

 இந்த நாட்டின் ஜனாதிபதி மீதும் அரசாங்கத்தின் மீதும் அதிக நம்பிக்கை வைத்துள்ளதாக தெரிவிக்கும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் கிழக்கு சூரியன் பெண்கள் அமைப்பினருடன் இணைந்து அம்பாரை மாவட்டம் கண்ணகிகிராம மக்களின் கணி, யானை வேலி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தருமாறு மகஜர்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் இன்று (22)கையளித்தனர்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலக்கத்திற்கு வருகை தந்த தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மாவட்ட இணைப்பாளர் கலந்தர் இஸ்ஸதீன் மற்றும்;  கள உத்தியோகத்தர் ம.கண்ணன் கிழக்கு சூரியன் பெண்கள் அமைப்பின் குழுவினர் என பலர் கலந்துகொண்டு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜிடம் மகஜர்களை கையளித்தனர்.

இதன் பின்னராக ஆலையடிவேம்பு பிரதேச சபை மற்றும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகளிடம் மகஜர்களை ஒப்படைத்தனர்.

கண்ணகிகிராமம் - 01, 02 கிராமசேவகர் பிரிவில் உள்ள மக்களுக்கான 245 வீட்டுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் 45 வருடங்கள் மேல் கடந்தும் இன்றுவரை வழங்கப்படவில்லை. யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீளவும் குடியேறிய இக்கிராமமக்கள் பிரதான தொழிலாக கல் உடைத்தல், மீன்பிடி, விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்நிலையில் தங்களின் காணி உறுதிப்பத்திரம் எப்போது கிடைக்கும் என்ற ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள்.
 
இந்த அரசாங்கத்தில் இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் பிரதேச செயலாளரினால் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இதனை வழங்க துரித நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்தனர்.
குடிநீர் வசதி ஆரம்பக்கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டபோதும் சுமார் 650 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும், மலைசார்ந்த பிரதேசமாக அமைந்துள்ள இக்கிராமத்தின் புவியியல் அமைப்பின் காரணமாக, குடிநீர் வசதி இதுவரை பல குடும்பங்களுக்கு எட்டாத நிலை இருந்து வந்துள்ளது. அதனையும் விரைவுபடுத்துமாறு வேண்டிக்கொண்டனர்.
கண்ணகிகிராமம் மற்றும் அயல் கிராமங்களான புளியம்பத்தை கபடாப்பிட்டி அளிக்கம்பை சாந்திபுரம் போன்ற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர்ச்சியாக காட்டு யானைகளின் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதோடு உடைமைகளையும் இழந்து வருகின்றனர். இதற்குரிய தீர்வினையும் விரைவுபடுத்துமாறு வேண்டிக்கொண்டனர்.