அம்பாறை மாவட்ட கலாசார அதிகார சபைக்கு புதிய நிர்வாகம் தெரிவு



 


(செல்வி வினாயகமூர்த்தி)


அம்பாறை மாவட்ட கலாசார அதிகார சபைக்கான புதிய நிர்வாகிகளை தெரிவு செய்யும் சிறப்புக் கூட்டம், அம்பாறை மாவட்ட கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை காரைதீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.


நீண்ட காலத்திற்குப் பின்னர், அம்பாறை மாவட்டத்தின் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதேசங்களை உள்ளடக்கிய கலாசார அதிகார சபைக்கான புதிய நிர்வாக சபை இரண்டாவது தடவையாக இக்கூட்டத்தின் ஊடாக முறைப்படி தெரிவு செய்யப்பட்டது.


காரைதீவு பிரதேச செயலாளர் ஜி. அருணன் தலைமையில், கிழக்குமாகாண சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் ஏ.எல். தௌஃபீக் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்டத்தின் பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த கலாசார அதிகார சபைகளின் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் மற்றும் கலாசார உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.


அம்பாறை மாவட்டத்தின் கலாசார மற்றும் கலை நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில், அனைவரினதும் இணக்கப்பாட்டுடன் 15 உறுப்பினர்களைக் கொண்ட புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டது.


இதன்படி, கலாபூஷணம், எம்.எல்.எம்.பாரூக் (பாலமுனை) தலைவராகவும், வா. குணாளன் (ஆலையடிவேம்பு) செயலாளராகவும், எஸ். நாகராஜா (காரைதீவு) பொருளாளராகவும், அஸ்வான் மௌலானா (சாய்ந்தமருது) உபதலைவராகவும், கலாபூஷணம் ஏ.எம். மஷூரா சுகுர்தீன் (கல்முனை) உபசெயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.


செயற்குழு உறுப்பினர்களாக எஸ்.தஸ்தஹீர், பரதன் கந்தசாமி (கல்முனை), டாக்டர் நௌஷாத் (சம்மாந்துறை), எம்.ஐ. தயூப் (அக்கரைப்பற்று), எஸ்.எம். அரூஸ் (அட்டாளைச்சேனை), அல்பெர்ட் சிவகாமிதேவி (திருக்கோவில்), எஸ். ஜெயசுந்தரம் (நாவிதன்வெளி), எஸ். ஜனுஸ் (காரைதீவு) ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.


அம்பாறை மாவட்டத்தின் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதேசங்களின் கலை மற்றும் கலாசாரத்துறையை மேம்படுத்துவதே புதிய நிர்வாக சபையின் பிரதான நோக்கமாகும். குறிப்பாக, கிராமியக் கலைஞர்களை ஊக்குவித்தல், அவர்களிடமுள்ள கலைத்திறமைகளை வெளிக்கொணர்தல், அவர்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்துதல் மற்றும் திறமையான கலைஞர்களைக் கௌரவித்தல் போன்ற செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.


மேலும், மாவட்ட செயலகத்தின் வழிகாட்டலுடன் எதிர்காலத்தில் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கலைத்துறை சார்ந்த வேலைத்திட்டங்கள், பயிற்சிப் பட்டறைகள் மற்றும் கலாசார விழாக்களை முன்னெடுக்க புதிய நிர்வாக சபை திட்டமிட்டுள்ளது.


இதன் மூலம் கிராமிய மட்டத்தில் காணப்படும் பாரம்பரிய கலை வடிவங்கள் மற்றும் கலைஞர்களை அடையாளம் கண்டு, அவர்களின் திறமைகளை மாவட்ட மட்டத்திலும் அதற்கு அப்பாலும் வெளிக்கொணர்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.


இந்நிர்வாக சபையில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அனுபம மங்கள விக்ரமாராச்சி பதவி வழி அதிகாரியாகவும்,மாவட்ட கலாசார உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலகங்களின் கலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்டோர் இணைந்து செயற்படவுள்ளனர்.


புதிய நிர்வாக சபையின் அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து, அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு சமூகங்களின் கலை, கலாசாரம் மற்றும் பண்பாட்டு மரபுகளைப் பாதுகாத்து, அவற்றின் வளர்ச்சிக்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.