காட்டு யானை தாக்கி நிந்தவூரைச் சேர்ந்த 38 வயதுடையவர் பலி



 


இறக்காமத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு : மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பியபோது பரிதாபம்; நிந்தவூரைச் சேர்ந்த 38 வயதுடையவர் பலி


நூருல் ஹுதா உமர்

அம்பாறை, இறக்காமம் 07 – நைனாகாடு பகுதியில் காட்டு யானை தாக்கியதில் நிந்தவூர், கோவில் வீதி, 19ஆம் பிரிவைச் சேர்ந்த 38 வயதுடைய மீராதஸ்லிம் என்பவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக இறக்காமம் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹோட்டல் ஒன்றில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த இவர், மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, வழியில் எதிரே வந்த காட்டு யானையைக் கண்டு அச்சமடைந்து தப்பியோட முயன்றுள்ளார்.

இதன்போது அவர் இடறி விழுந்ததாகவும், அவரை காட்டு யானை மிதித்ததில் உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்கான அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் இறக்காமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

காட்டு யானைகள் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளிலும் வீதிகளிலும் பிரவேசிப்பதால், பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் மீண்டும் கவலைகள் எழுந்துள்ளன.