சீரற்ற காலநிலை - இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிவிப்பு




 சீரற்ற காலநிலையினால் ஏற்படக்கூடிய அனர்த்தம் மற்றும் அவசர நிலைமைகளுக்கு முகங்கொடுப்பதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தொடர்பாக வானிலை அவதான நிலையம் விடுத்துள்ள எச்சரிக்கைகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.


இதன்படி வடக்கு, மேல், சப்ரகமுவ, தெற்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் அனுராதபுர மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


இதன் காரணமாக, இந்தப் பகுதிகள் அனைத்திற்கும் தேவையான உபகரணங்களும் மீட்புக் குழுவினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதீப் கொடிப்பிலி சுட்டிக்காட்டினார்.


இதேவேளைஇ வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது, இன்றைய தினம் (25) முற்பகல் 11.30 மணியளவில் தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.


இது வங்காள விரிகுடாவின் கிழக்கு - மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்குப் பகுதி ஊடாக தென்மேற்கு திசையை நோக்கி நகர்ந்து, படிப்படியாகத் திரும்பி, மேற்கு நோக்கி வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் நாட்களில் மேலும் தீவிரமடையவுள்ளது.


இதன்படி, நாளை 26 ஆம் திகதி காலை புயலாகவும், அடுத்தநாள் (27) காலை வங்காள விரிகுடாவின் மேற்கு - மத்திய கடற்பகுதியை ஒட்டி வலுவான புயலாகவும் வலுவடைவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன.


இதன் நேரடித் தாக்கம் இலங்கைக்கு இல்லை என்றபோதிலும், காற்றpன் ஓட்டம் நாட்டின் ஊடாகச் செயல்வதால், நாட்டின் தென்மேற்குப் பகுதியில் வரும் சில நாட்களில் மழையுடனான காலநிலை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


வடக்கு, மேல், சப்ரகமுவ, தெற்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், அனுராதபுர மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான கன மழை பெய்யக்கூடும்.


ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துகளைக் குறைத்துக் கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வானிலை அவதானநிலையம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.