ஐந்து ஆண்டுகளாகத் தொடரும் போதைப்பொருள் பாவனை மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் குறித்து முறைப்பாடு



 


🔵 ஐந்து ஆண்டுகளாகத் தொடரும் போதைப்பொருள் பாவனை மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் குறித்து முறைப்பாடு; அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தலையீட்டையடுத்து பொலிஸார் நேரடி விஜயம்


✍️ தில்சாத் பர்வீஸ்


சம்மாந்துறை ஹிலால் ஜும்ஆ பள்ளிவாசலை அண்மித்த குடியிருப்புப் பகுதியில் இரவு வேளைகளில் போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட சமூக விரோதச் செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும், பற்றைக்காடுகளாக மாறியுள்ள காணிகளால் சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்து முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளைத் தொடர்ந்து, பொலிஸார் குறித்த பகுதிக்கு நேரில் விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.


குறித்த பகுதியில் சுமார் ஐந்து ஆண்டுகளாக நிலவி வரும் இப்பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு அதிகாரிகளிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதிலும், இதுவரை எதிர்பார்த்த தீர்வு கிடைக்கவில்லை என வீரமுனை 04 சிவில் பாதுகாப்புக் குழுவின் தலைவரும், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை உறுப்பினருமான எம்.எம். முஹம்மட் அலி தெரிவித்துள்ளார்.


குறித்த பகுதியில் இரவு வேளைகளில் போதைப்பொருள் பாவனை மற்றும் விபச்சாரம் உள்ளிட்ட சமூக விரோதச் செயற்பாடுகள் இடம்பெறுவதாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே அக்காலத்தில் சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.


இப்பகுதியில் நீர் மற்றும் மின்சார வசதிகளுடன் சுமார் 26 வீடுகள் அமைந்துள்ளன. அதேவேளை, அப்பகுதியில் காணிகளை வாங்கிய சிலர் அவற்றைப் பராமரிக்காமல் கைவிட்டுள்ளதால், அவை தற்போது பற்றைக்காடுகளாக மாறியுள்ளன. இதனால் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதுடன், அப்பகுதி மக்கள் பல்வேறு சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைகளுக்கும் முகங்கொடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இப்பிரச்சினைகள் தொடர்பில் வீரமுனை 04 கிராம உத்தியோகத்தர், சம்மாந்துறை பிரதேச செயலாளர், சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட தரப்பினருக்கு எழுத்துமூலம் முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், எனினும் எதிர்பார்த்த நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் முஹம்மட் அலி தெரிவித்தார்.


மேலும், குறித்த முறைப்பாட்டுக் கடிதத்தின் பிரதியொன்று சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபைக்கும் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், அங்கிருந்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.


இந்நிலையில், ஏற்கனவே சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அனுப்பப்பட்ட முறைப்பாட்டுக் கடிதங்களின் பிரதிகளை அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்ததைத் தொடர்ந்து, இன்று (22) சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமார தலைமையிலான பொலிஸ் குழுவினர் ஹிலால் ஜும்ஆ பள்ளிவாசல் பகுதிக்கு நேரில் விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.


இதன்போது, எதிர்வரும் 27ஆம் திகதி அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல சம்மாந்துறைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்கத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக முஹம்மட் அலி மேலும் குறிப்பிட்டார்.


இந்த விஜயத்தின்போது ஹிலால் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர், செயலாளர் உள்ளிட்ட நிர்வாக உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.