பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவை பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் இன்று (18) பாராளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது, தொல்லியல் பட்டதாரிகளை வரலாற்றுப் பாட ஆசிரியர்களாக ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளனர்.
இதற்குப் பதிலளித்த பிரதமர், தொல்லியல் துறையில் பாரிய ஆளணிப் பற்றாக்குறை நிலவுவதால், எதிர்காலத்தில் தொல்லியல் பட்டதாரிகளைத் துறைசார்ந்த அரச திணைக்களங்களில் இணைத்துக்கொள்ள ஆலோசித்து வருவதாகத் தெரிவித்தார்.
இதனால், புதிதாகத் தொல்லியல் பட்டதாரிகளை ஆசிரியர்களாக ஆட்சேர்ப்பு செய்யும் திட்டம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
எனினும், ஏற்கனவே பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகப் பணியாற்றி வரலாற்றுப் பாடம் கற்பிக்கும் தொல்லியல் பட்டதாரிகள், மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்தால், அவர்களை வரலாற்றுப் பாட ஆசிரியர்களாக உள்ளீர்ப்பது தொடர்பில் சாதகமாகப் பரிசீலிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தேசியப் பாடசாலைகளின் வளப் பற்றாக்குறைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
வளப் பற்றாக்குறை நிலவும் பாடசாலைகள் மற்றும் அவற்றுக்குத் தேவையான வளங்கள் தொடர்பான விபரங்களைச் சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்ட பிரதமர், அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
(விஜயரத்தினம் சரவணன்)


Post a Comment
Post a Comment