நீதிபதியையும், நீதிமன்றத்தையும் அவமதித்த கருத்துக்கு எதிராக சட்டத்தரணிகள்,கண்டனம்



 


நீதிபதியையும், நீதிமன்றத்தையும் அவமதித்த கருத்துக்கு எதிராக சட்டத்தரணிகள் கண்டனப் போராட்டம்!


அபு அலா 


திருகோணமலை நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம்.சம்சுடீன் அவர்களினால் பிறப்பிக்கப்பட்ட சட்டபூர்வமான பிடியாணை உத்தரவை விமர்சித்தும், நீதிமன்றத்தையும், நீதிபதியையும் அவமதிக்கும் வகையிலும் கருத்து வெளியிட்ட பலாங்கொடை கஸ்ஸப்ப தேரரின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினர் இன்று (13) கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருகோணமலை நீதிமன்றத் தொகுதிக்கு முன்பாக நடைபெற்ற இக்கண்டன கவனயீர்ப்புப் போராட்டத்தில் சட்டத்தரணிகள் பலரும் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.


இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் கிளைத் தலைவர், நீதித்துறை எவ்வித அரசியல் அல்லது ஏனைய அழுத்தங்களுக்கும் உட்படாமல் சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் செயற்படுவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.


மேலும், நீதிமன்றங்களினதும் நீதிபதிகளினதும் கௌரவத்தையும், நீதித்துறையின் சுயாதீனத்தன்மையையும் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார்.