சாகித்ய அகாதெமி விருது எழுத்தாளர் ஆ.மாதவனுக்கு அளிக்கப்படுகிறது





தமிழ்ப் படைப்பாளிகளுக்கான 2015ஆம் ஆண்டின் சாகித்ய அகாதெமி விருது எழுத்தாளர் ஆ. மாதவனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

2013ல் வெளியிடப்பட்ட இவரது 'இலக்கியச் சுவடுகள்' நூலுக்காக தற்போது சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டிருக்கிறது.
1934ல் திருவனந்தபுரத்தில் பிறந்த ஆ. மாதவன், பள்ளிக்கூடத்தில் தமிழிலும் மலையாளமும் பயின்றார்.
ஆ. மாதவனின் ஆரம்ப கால எழுத்துகளில் திராவிட இயக்கத்தின் தாக்கம் இருந்தது. அதன் பின் லா.ச. ராமாமிருதம், தி. ஜானகிராமன், புதுமைப்பித்தன் ஆகியோரது எழுத்துக்களில் மாதவன் ஈர்க்கப்பட்டார்.
மொழிபெயர்க்கப்பட்டிருந்த விக்டர் ஹ்யூகோவின் கதை ஒன்றை தமிழில் மொழிபெயர்த்ததே மாதவனின் முதல் இலக்கிய முயற்சி.
இவரது முதல் தொகுதியான 'மோகபல்லவி' 1974ல் வெளிவந்தது.
இதுவரை ஐநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை ஆ. மாதவன் எழுதியிருக்கிறார்.
'புனலும் மணலும்', 'தூவனம்', 'கிருஷ்ணப் பருந்து' ஆகியவை இவரது நாவல்கள்.
'இனி நான் உறங்கட்டும்', 'யக்ஷி', 'கமலா தாஸின் கதைகள்' உள்ளிட்ட படைப்புகளை மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் ஆ. மாதவன்.
தினமணிக் கதிர், தீபம் பத்திரிகைகளில் பணிபுரிந்திருக்கும் ஆ. மாதவன், 'கேரளா தமிழ்' இதழின் ஆசிரியராகவும் விளங்கினார்.
மலையாள இலக்கிய உலகுடன் நெருங்கிய பரிச்சயம் கொண்டிருக்கும் ஆ. மாதவன் தற்போது திருவனந்தபுரத்தில் வசித்துவருகிறார்