திட்டமிட்டு அரசியல் கைதிகளது விடுதலை இழுத்தடிக்கப்படுவதை அம்பலப்படுத்த தமிழ் அரசியல் கைதியொருவர் இன்று திங்கட்கிழமை முதல் யாழ்.சிறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதித்துள்ளார். அச்சுவேலியினை சேர்ந்தவரான சி.ஜெலீபன் (வயது 36) எனும் அரசியல் கைதியே உணவு தவிர்ப்பு போராட்டத்தினில் குதித்துள்ளார்.
தனது உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்பினில் அவர் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளார்.2006ம் ஆண்டு மட்டக்களப்பிலிருந்து பொலநறுவையூடாக வருகை தந்து கொண்டிருந்த வேளை இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
தற்போதைய ஜனாதிபதியும் முன்னாள் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேனாவினை கொலை செய்ய முயற்சித்தமை மற்றும் யாழ்ப்பாணத்தினில் ஆயுதப்பயிற்சி பெற்றமை மற்றும் தாக்குதல்களினை நடத்தியமை ஆகிய மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுய ஒப்புதல் வாக்குமூலமொன்றை பெற்றுக்கொண்ட உதவி காவல்துறை அத்தியட்சகர் ஒருவர், கடந்த ஆறு வருடங்களாக யாழ்.மேல்நீதிமன்ற விசாரணைக்கு சமூகமளிக்காமையால் விசாரணைகள் இன்றி ஜெலீபன் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
