ருவாண்டா இனப்படுகொலை: குற்றவாளிகள் மீது ஐநா தீர்ப்பாயம் இறுதித் தீர்ப்பு




ருவாண்டாவுக்கான ஐநாவின் சர்வதேச குற்றவிசாரணை தீர்ப்பாயம் விசாரணை நடத்திவந்த 6 பேரையும் குற்றவாளிகள் என்று உறுதிசெய்து இறுதித் தீர்ப்பை அளித்துள்ளது.
ஆறு பேரின் கடைசி மேன்முறையீடுகளும் தோல்வியில் முடிந்துள்ளன. அத்தோடு இந்தத் தீர்ப்பாயம் தனது பணிகளை முடித்துக்கொள்கின்றது.
மூன்று குற்றவாளிகளின் ஆயுள்தண்டனைகள் தலா 47- ஆண்டு சிறைத் தண்டனையாக இந்தத் தீர்ப்பு மூலம் குறைக்கப்பட்டுள்ளன.
ருவாண்டாவில் 1994-ம் ஆண்டில் நடந்த இனப்படுகொலையில் முக்கிய சந்தேகநபர்களாக குற்றம்சாட்டப்பட்டிருந்தவர்களை விசாரிப்பதற்காக தன்ஸானியாவின் அருஷா நகரில் ஐநாவால் இந்த தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது.
ருவாண்டாவின் முன்னாள் அமைச்சர் போலின் நியிராமாஸுஹுகோ அடங்கலாக மனித குலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்று முன்னர் தீர்ப்பளிக்கப்பட்டிருந்த 6 பேரும் மேன்முறையீடு செய்திருந்தனர். தங்கள் மீதான எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் அவர்கள் நிராகரித்திருந்தனர்.
இரண்டு தசாப்தங்களாக நடந்துவந்த விசாரணைகளில் 61 பேரை இனப்படுகொலை குற்றச்சாட்டில் குற்றவாளிகள் என்று இந்த நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. குற்றம்சாட்டப்பட்டிருந்த 14 பேரை விடுதலை செய்திருந்தது.
இந்த நீதிமன்றம் எட்டியிருந்த முன்னேற்றங்களை பலரும் பாராட்டியிருந்த போதிலும், அது இன்னும் அதிகம் செயற்பட்டிருக்க வேண்டும் என்றுதான் ருவாண்டாவின் அதிபர் பால் ககாமே உள்ளிட்ட பலரும் கூறுகின்றனர்.