(க.கிஷாந்தன்)
தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பாக பல்வேறுப்பட்ட பேச்சுவாரத்தைகள் பெரும்பாலும் தோல்வியிலேயே முடிந்து வந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 31ம் திகதியுடன் காலாவதியான சம்பள பேச்சுவார்த்தை தொடர்ந்தும் இழுபறி நிலையில் வந்துள்ளது. பலதரப்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக சம்பள பேச்சுவாரத்தை முற்றுபெறாத நிலையில் கடைசியாக இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் ஒரு இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும் என்பதை வழியுறுத்தி பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பனர் வடிவேல் சுரேஸ் பாராளுமன்ற வளாகத்தில் தான் தீ குளிக்கப்போவதாக தெரிவித்திருந்தார்.
கடைசியாக இடம்பெறும் பேச்சுவார்த்தையில் இணக்காடு ஒன்று ஏற்பட்டு தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைத்தே ஆக வேண்டும் என்பது அவரின் வழியுறுத்தலாக இருந்தது.
இருந்தும் அமைச்சர்கள் மட்டத்திலும், தொழிற்சங்க மட்டத்திலும் பெருந்தோட்ட கம்பனி நிர்வாகங்களை வழியுறுத்தி சம்பள பேச்சுவார்த்தை முன்னெடுக்பட்டு வந்தது.
கடைசியாக இடம்பெற்ற பேச்சுவார்த்தை ஒரு இணக்கபாடு எட்ட முடியாத நிலையில் இருந்ததால் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தீ குளிக்க முற்பட்டார்.
மலையக மக்களின் கோரிக்கைகளுக்கு தீர்க்கமான ஒரு முடிவு எட்டப்படும் என்பது இவரின் இழக்காக இருந்தாலும் தீர்க்கமான முடிவு எட்டப்படாத நிலையில் தோட்ட தொழிலாளர்களுக்காக தீ குளிக்க முற்பட்ட வேளையில் பாராளுமன்ற பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் ஊடாக தடுத்து நிறுத்தப்பட்டு தீர்கமான முடிவு ஒன்று எட்டப்படும் வரை இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என வழியுறுத்தப்பட்டது.
இது தொடர்பாக மலையக தோட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கும் கருத்துகள்..
தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் விடயம் தொடர்பாக வாக்களித்து தேர்ந்தெடுக்கபட்ட ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் தான் தீ குளிக்கப்போவதாக அறிவித்திருந்தமையை நாங்கள் வரவேற்கின்றோம். அதேவேளை நாங்கள் வாக்களித்த மலையக பிரதேசத்தில் இவர் இவ்வாறான தீ குளிப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுயிருந்தால் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு அம்சமாகும். ஆனால் தன்னை பாதுகாத்து விடுவார்கள் என்பதை மனதில் வைத்துக்கொண்டு செய்யப்பட்ட ஒரு செயலாகவே இதை நாம் கருதுகின்றோம்.
எந்த எந்த வகையில் தொழிலாளர்களை ஏமாற்ற முடியுமோ அந்த வகையை கையாண்டு வருபவர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்ததையடுத்து நாம் வெட்கப்படுகின்றோம். தொழிலாளர்களையும் அடிமையாக்கி தொழிற்சங்கங்கள் அடிமையாகும் நிலை மலையகத்திற்கு ஏற்பட்டுள்ளது.
உங்கள் சக்தியை வெளிப்படுத்த வேண்டுமானால் தொழிலாளர்களின் பலம் என்னவென்று என்பதை எடுத்துக்காட்ட அதற்கு ஏற்றவாறு செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும். வெறுமனே இவ்வாறாக தீ குளிக்கிறேன். உயிரை விடுகிறேன் என்ற கபட பேச்சு எல்லாம் தொழிலாளர்கள் இனிமேலும் நம்பபோவதில்லை. பேச்சுவார்த்தையை உருக்கமாக நிறைவேற்ற தொழிலாளர்களின் சக்தியை ஏனையவர்கள் உணரும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுங்கள். ஒரே வாரத்தில் நாம் எட்டக்கூடிய சம்பளத்தை பெற்றுவிடலாம்.
எத்தனை போராட்டங்கள் துன்பங்கள் வேதனைகள் அனைத்தையும் சந்தித்தவர்கள் தோட்ட தொழிலாளர்கள். ஆகவே எங்களது உரிமையை பெற்றுக்கொள்ள எத்தனை போராட்டங்கள் வேண்டுமானாலும் செய்ய நாங்கள் தயார்.
எங்கள் சக்தியை வெளிப்படுத்த எங்கள் பிரதிநிதிகள் எங்களுக்கு சக்தியாக இருக்க வேண்டும். நாங்கள் தெரிவு செய்த தலைவர்கள் உயிரை விட்டு விட்டால் நாங்கள் போகும் நிலை என்ன? இனிமேலும் சினிமா பாணியில் பிரச்சினைகளை தீர்க்காமல் ஒரு தீர்க்கமான முடிவுவை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாக அமைகின்றது.

