சமூக அமைப்புக்களை வலுப்படுத்துவதனூடாகவே அபிவிருத்திகளைச் சாதிக்கலாம்





-(ஹுஸைன்)

சமூக மட்ட அமைப்புக்களை வலுப்படுத்துவதனூடாகவே பல்வேறுபட்ட அபிவிருத்திகளைச் சாதிக்க முடியும்பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா ஞாயிறன்று தெரிவித்தார்.
ஏறாவூர் பிரதேச செயலகப் பிரிவில் மேற்கொள்ளப்பட்டு வரும் வறுமை ஒழிப்புத் திட்டம் பற்றிக் கேட்டபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
அது பற்றி மேலும் தெரிவித்த அவர் கூறியதாவது,
ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவில் வாழ்கின்ற சிறியோர் தொடக்கம் முதியோர் வரை அத்தனை பிரஜைகளுக்கும் முழுமையான சேவையை ஏறாவூர் நகர பிரதேச செயலகம் வழங்கி வருகின்றது என்பதில் தான் பெருமையடைகின்றேன்.
ஏறாவூரில் வறுமை என்பது சற்று அதிகமாக இருப்பதாக ஆயு;வுகள் தெரிவிக்கின்றன.
ஒன்றிணைக்கப்பட்ட அபிவிருத்தியினூடாகவே இந்த வறுமைக்குப் பரிகாரம் தேட முடியும்.
இப்பொழுது ஏறாவூர் சமூகம் எதிர்நோக்குகின்ற சவால் கல்வி கற்கின்ற மாணவர்களில் 20 சத வீதமான மாணவர்கள்தான் தமது உயர்கல்வி நிலையை அடைந்து கொள்கின்றார்கள்.
ஏனையோர் உயர் கல்வியை அடைந்து கொள்வதற்கு முன்னதாகவே தமது கல்வியைக் கைவிட்டு வேறு விடயங்களில் கவனஞ் செலுத்துகின்ற போக்கு அதிகரித்து வருகின்றது.
எனவே, சமூகத்திலுள்ள அத்தனை தரப்பாரும் இது பற்றிச் சிந்திக்க வேண்டிய காலத்தின் கட்டாயம் காணப்படுகின்றது.
பல்வேறுபட்ட திட்டங்களினூடாக இடைநடுவிலே தமது கல்வியைக் கைவிடுகின்ற 80 சதவீதமான மாணவர்களின் கல்வியை வடிவமைத்து வளப்படுத்த வேண்டும்
ஏறாவூர் நகர பிரதேச செயலகம் இது குறித்து சமூகத்தின் அத்தனை தரப்பாரையும் ஒருங்கிணைத்து ஆக்கபூர்வமான திட்டங்களை வகுக்க எண்ணியுள்ளது.
சமூக மட்ட அமைப்புக்களை வலுப்படுத்துவதனூடாகத்தான் பல்வேறுபட்ட அபிவிருத்திகளைச் சாதிக்க முடியும் என அரசின் புதிய கொள்கைகள் வலியுறுத்துகின்றன.
அதனையே இந்தப் பிரதேச செயலகம் அமுல்படுத்திக் காட்டவுள்ளது' என்றார்.