குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படும் நிலையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இதில், மும்பை அருகே உள்ள மும்ராவில் கைது செய்யப்பட்ட வாலிபர் முஸ்தாக் சேக் தான் சமூகவலைதளங்கள் வாயிலாக இந்தியாவில் இருந்து ஐ.எஸ். அமைப்பிற்கு ஆள் சேர்த்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையடுத்து ஐ.எஸ். தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவான கருத்துகளை பரப்பி வரும் இணையதளங்களை கண்டறிந்து மராட்டிய தீவிரவாத தடுப்புப்பிரிவு பொலிசார் முடக்கி வருகின்றனர்.
இது குறித்து மாநில தீவிரவாத தடுப்புப்படை தலைவர் பன்சால்கர் கூறுகையில் ‘‘இதுவரை ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை ஆதரித்து பிரசாரம் செய்து வந்த 94 இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் மராட்டியம் உள்பட 10 அல்லது 12 மாநிலங்களில் ஐ.எஸ். அமைப்பின் தாக்கம் இருப்பது தெளிவாக தெரிகிறது. அந்த அமைப்பினர் சமூகவலைதளங்கள் வாயிலாக இந்திய இளைஞர்களை மூளைச்சலவை செய்வதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.
ஐ.எஸ். அமைப்பு குறித்து பிரசாரம் செய்து வரும் இணையதளங்களை தொடர்ந்து கண்டறிந்து முடக்கி வருவதாகவும் அவர் மேலும்தெரிவித்துள்ளார்.

