
(ரி.கண்ணன்-கொழும்பு)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சராக இருந்த காலப்பகுதியில் அவரை கொலை செய்ய முற்பட்டதாக கூறப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட, முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உறுப்பினர் சிவராஜா ஜெனீவன் என்பவருக்கு, ஜனாதிபதி மன்னிப்பு வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2005ஆம் ஆண்டு காலப் பகுதியில் பொலன்னறுவை பிரதேசத்தில் இந்தக் கொலை முயற்சி இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், இதற்காக குற்றவாளிக்கு 10 வருடங்கள் சிறைதண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து பொலன்னறுவை மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
எனினும் இந்த தண்டனையை எதிர்த்து குற்றவாளியான ஜெனீவன் தனது சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டை செய்திருந்தார்.
இந்தநிலையில் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கத் தீர்மானித்துள்ளதால், குறித்த மேன்முறையீட்டை தள்ளுபடி செய்ய அனுமதிக்குமாறு பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி யு.ஆர்.டி.சில்வா இன்று நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனையடுத்து விடயங்களை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், பிரதிவாதியின் முறையீட்டை தள்ளுபடி செய்ய தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
