நாட்டில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பிலான உள்நாட்டு பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படுமென வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நோர்வே வெளிவிவகார அமைச்சர் போகே பிரன்டேவுடன் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பிலான நடவடிக்கை எடுப்பது குறித்த உள்ளக பொறிமுறை தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் செயற்பாடுகள் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, முழு நாடாளுமன்றத்தையும் அரசியல் அமைப்பு பேரவையாக மாற்றுவது தொடர்பில் எதிர்வரும் சனி்க்கிழமை இடம்பெறவுள்ள நாடாளுமன்றத்தின் விசேட அமர்வில் கவனம் செலுத்தப்படுமெனவும் அவர் குறி்ப்பிட்டுள்ளார்.
மேலும் பொதுமக்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளுக்கு அமைய அவர்களது அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் புதிய அரசியல் யாப்பை உருவாக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மீன்பிடி மற்றும் சூரிய சக்தி பயன்பாடு தொடர்பிலான விடயங்களில் நோர்வேயின் தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

