முஸ்லீம் பெண்கள் பாடசாலைக்கு அல்லது நீதிமன்றத்திற்குச் செல்லும்போது முகத்தினை மூடும் அவர்களின் முக்காட்டை அணிந்து செல்ல முடியாது என்று பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரன் தெரிவித்துள்ளார். குறித்த இடங்களில் நடைமுறையில் இருக்கும் சீருடைகளையே அவர்கள் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுள்ளார்.
பிரித்தானியக் குடியேற்றவாசிகள் குறித்துக் கருத்துத் தெரிவித்திருக்கும் பிரதமர், இரண்டரை ஆண்டுகளுக்குள் தமது ஆங்கிலத் தேர்ச்சியை அவர்கள் வெளிக்காட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இரண்டரை ஆண்டுக்குள் ஒருவர் ஆங்கில மொழியிலான தனது தேர்ச்சியை நிறுவத் தவறும்பட்சத்தில் அவர் நாட்டை விட்டு வெளியேற்றப் படுவார் என அவர் மேலும் கூறினார். இச் செயன்முறை இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் அமுல் படுத்தப்பட இருக்கிறது. குறிப்பாக குடும்ப இணைவிற்கான விசா பெற்று வரும் குடும்ப அங்கத்தவர்கள் இதற்கு உட்படுகிறார்கள்.
குடும்ப விசா பெற்றுவரும் பெண்கள் தமது ஆங்கிலத் தேர்ச்சியை ஐந்து ஆண்டுகளில் அவர்கள் தோற்றும் பரீட்சையில் வெளிக்காட்ட வேண்டும் எனும் சட்டம் தற்போது நடைமுறையில் இருக்கிறது. இதனை இரண்டரை ஆண்டுகளாகப் புதிய சட்டம் குறைத்திருக்கிறது. தவறுவோருக்கான வதிவிட அனுமதி மறுக்கப் படுவதோடு, நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு அவர்கள் முகம் கொடுக்க வேண்டி இருக்கும்.
இன்று BBC Radio -4 இல் இடம்பெற்ற Today Programme நிகழ்வில் கலந்து கொண்ட போதே இக்கருத்துக்களை பிரதமர் முன் வைத்தார். தான் முன்வைக்கும் இச்சட்டங்கள் கடுமையாகக் கைக் கொள்ளப்படும் என அவர் வலியுறுத்தி இருந்தார்.

