இந்திய வீடமைப்புக்கான அடிக்கல்-பூண்டுலோயாவில்



(க.கிஷாந்தன்)

இந்த நாட்டில் மாற்றம் ஒன்று தேவை என்பதற்காக மலையக மக்கள் வாக்களித்தனர். இந்த மாற்றத்தின் அடிப்படையில் நல்லாட்சி அரசாங்கத்தில் இன்று புதிய கிராமங்கள் புதிய வீடமைப்புகள் மலையகத்தில் பரவலாக இடம்பெற்று வருகின்றது. அதேவேளை இந்திய அரசாங்கத்தின் 4000 வீட்டுத்திட்டத்திற்கான முதல் அடிக்கல் நாட்டும் விழா மார்ச் மாதம் பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் இடம்பெறவுள்ளதாகமலைநாட்டு புதிய கிராமங்கள்உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

அக்கரப்பத்தனை பெங்கடன் சின்ன தோட்டத்தில் மலையக வரலாற்றில் முதல்முறையாக ஒரே இடத்தில் 114 வீடுகளை அமைத்து நவீன கிராமம் அமைக்கும் அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் அவர்ர இவ்வாறு தெரிவித்தார்.

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் அபிவிருத்தி தொலைநோக்குக்கு அமைவாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டலின் பேரில் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக அமைக்கப்படும் புதிய தனி வீடுகளுக்கான அடிக்கல் நாட்டு விழா 30.01.2016 அன்று நடைபெற்றதில் மேலும் உரை நிகழ்த்துகையில் தெரிவித்ததாவது,

75 வருட கால அரசியலில் மக்களுக்கு கிடைக்காத சலுகைகள் உரிமைகள் இப்பொழுது புதிய நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் எனது அமைச்சின் ஊடாக கிடைக்கப்பெற்று வருகின்றது. இதை சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

75 வருடங்கள் எம்மக்களை ஏமாற்றியது போதும் இனிமேலும் ஏமாற மாட்டார்கள். ஏமாற்றவிடவும் மாட்டேன்.

அரசாங்கத்தை தட்டிக் கேட்க வேண்டும் அப்பொழுது தான் உரிமையை பெற முடியும் மலையகத்தில் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை மலையக மக்கள் முன்னணியின் தொழிலாளர் தேசிய சங்கமும் இணைந்து முன்னெடுக்கின்றது. எங்கள் இருவருக்கும் இடையில் பிணக்குகளை ஏற்படுத்தி சிலர் பிரிக்க முற்படுகின்றனர். எங்ககளை பிரிக்க முடியாது. மலையகத்தவர்கள் மாகாண சபை, பிரதேச சபை, பாராளுமன்றம் என செல்ல வேண்டும். அப்பொழுது தான் மேலும் உரிமைகளை பெற முடியும்.

இங்கு அமைக்கப்படும் புதிய வீட்டு தொகுதியில் தங்களுக்கான ஒவ்வொரு வீட்டுக்கும் சிரமதானங்கள் மூலமான வேலைகளை முன்னெடுத்தால் 6 மாதத்தில் அமையும் வேலை 3 மாதத்தில் அமைக்க முடியும். தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் அவர்கள் அவர்களுடைய கட்சி தலைவர்களுடன் செயற்பட வேண்டும். கட்சி மாற வேண்டிய அவசியம் இல்லை. அபிவிருத்தி வேலைகள் பொதுவாகவே முன்னெடுக்கப்படும் என அவர் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.