க.கிஷாந்தன்)
கொழும்பு 07, டி.எஸ். சேனநாயக்க கல்லூரியில் சர்வதேச தாய்மொழித்தின விழா இன்று கல்லூரியின் அதிபர் எம்.எம். ரத்நாயக்க தலைமையில் நடைபெறுகிறது.
கல்லூரியின் ஆர்.ஐ.ரி. அலஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ள இவ்விழாவில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் பிரதம அதிதியாக கலந்துகொள்கிறார். கௌரவ விருந்தினராக கல்வியமைச்சின் தமிழ்ப்பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. கிறேஸ் சடகோபன் கலந்து கொள்கிறார்.
இவ்விழாவில் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் நாட்டார் பாடல் பிரசங்கமும், யாழ். மாணவர்களால் யாழ்ப்பாண நாட்டுக்கூத்தும் இடம்பெறவுள்ளது.
இது இவ்வாறிருக்க கல்லூரியின் தமிழ்ப்பிரிவு உதவி அதிபரின் இடமாற்றம் குறித்து விடுத்த கோரிக்கைக்கு அமைச்சர் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையெனவும் இதற்கு கண்டனம் தெரிவிக்கு முகமாக அன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்போவதாக பழைய மாணவர்களும் பெற்றோர்களும் தெரிவித்தனர்.
கடந்த காலங்களில் கல்லூரியின் தமிழ்ப்பிரிவு நிர்வாகம் முறையாக செயற்படாமையால் மாணவர்கள் கல்வியில் மிகவும் பின்னடைவுக்குச் சென்றமையையும் கல்லூரியின் நிலைமைகளையும் விரிவாக கல்வி இராஜாங்க அமைச்சரிடம் தாம் நேரில் எடுத்துக் கூறியிருந்தோம். கடந்தாண்டு குறித்த தமிழ்ப்பிரிவு உதவி அதிபருக்கு கல்வியமைச்சினால் இடமாற்றக் கடிதம் வந்தபோது அதனை ரத்துச்செய்திருந்தார் பிரதியமைச்சர்.
இந்நிலையில் இவ்வாண்டும் அவருக்கு இடமாற்றக் கடிதம் வந்துள்ளதுடன் புதிதாக அப்பதவிகளுக்கு இரு அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்னும் கல்லூரியின் பொறுப்புகளை வழங்காமல் மீண்டும் இடமாற்றத்தை ரத்துச்செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் இதனைக் கண்டித்து இன்றைய தினம் தாம் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தப்போவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

