ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே வெற்றிபெற வைப்பதே எனது முதற்பணி - நிமால் சிரிபால



(க.கிஷாந்தன்)

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக, சட்டபூர்வமாகவே பதவியேற்றார். அந்தவிடயத்தில் எவ்வித மாற்றுக்கருத்துக்களும் இடமில்லை. கட்சியின் விதிமுறை, சட்டம் ஆகியவற்றுக்கு புறம்பாக, கட்சியின் தலைமையை அவர் ஏற்கவில்லையென்று, போக்குவரத்து அமைச்சர் நிமால் சிரிபால டி சில்வா குறிப்பிட்டார்.

ஊவா மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணியின் மாநாட்டில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட அமைச்சர் நிமால் சிரிபால டி சில்வா, மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்,  

அரசில் அமைச்சராக இருந்தபோதிலும், எக்காரணம் கொண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு நான் துரோகம் செய்யவில்லை. அக்கட்சியின் மேம்பாடுகளை முன்னிலைப் படுத்தி அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றேன்.

அக்கட்சிக்கு யார் தலைவரானாலும், அத்தலைவருக்கு கட்டுப்பட்டு செயலாற்றுவதில் நான் பின்னற்கப் போவதில்லை. தனி நபருக்கல்ல. கட்சியே எனக்கு முக்கியமாகும்.

நான் அமைச்சராக இருந்த போதிலும், எதிர்வரும் காலங்களில் நடைபெறும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே வெற்றிபெற வைப்பதே எனது முதற்பணி. கட்சிக்கு எவ்வகையிலும் மாசினை ஏற்படுத்த முனையமாட்டேன். அதனை ஏற்படுத்த முனைபவர்கள் மீதும் நான் கடுமையாகவே இருப்பேன் என்றார்.